Click to enlarge
Nollendorfplatz, 1912

அடர்த்தியான வண்ணங்கள், மெலிந்த, நீண்ட கோடுகள் ஜெர்மானிய ஓவியரான எர்ன்ஸ்ட் லுட்விக் கிர்ஹ்னரின் (Ernst Ludvig Kirchner, 1880-1938) பாணி.

பரபரப்பான சதுக்கம் ஒன்றை வர்ணிக்கும் இந்தப் படத்தில் ஒன்றையொன்று முட்டிக்கொண்டு நிற்கும் பேருந்துகள், சாலை, கட்டிடங்கள், மனிதர்களை எல்லாம் பட்டையான வண்ணங்களாலும் கருப்புக் கோடுகளாலும் வரைந்திருக்கிறார் கிர்ஹ்னர்.

ஓவியத்தின் மேற்பகுதியில் இருக்கும் கட்டிடங்கள், வலப்பக்கம் உள்ள வளைவு, நடைபாதையின் ஓரம் ஆகிய இடங்களில் அலட்சியமாகவும் அநாவசியமாகவும் கிறுக்கப்பட்டது போல் வரையப்பட்டிருக்கும் அடர்த்தியான கோடுகள், படத்தில் பளிச்சென்று தெரியும் வண்ணங்களையும் மீறி ஒரு கோட்டுச் சித்திரத்தின் தன்மையைச் சேர்க்கின்றன. இந்தக் காட்சி நிஜம் அல்ல, பிம்பம் என்று நினைவுபடுத்துவது போல் இந்தக் கோடுகள் இருக்கின்றன.

‘நோலண்டோர்ஃப்ப்ளாட்ஸ்’ என்பது பெர்லினில் இருக்கும் ஒரு இடம் என்று கூகிள் தேடலில் தெரிந்தது.

Advertisements

chairing.jpg
Chairing the Members, 1754

பிரிட்டிஷ் ஓவியர் வில்லியம் ஹோகார்த் (William Hogarth, 1697-1764) மிகக் காரசாரமான நையாண்டி ஓவியங்களை வரைவதில் புகழ் பெற்றவர். உண்மையில் அவை கடுமையான, கசப்பான அரசியல், சமூக விமர்சனங்கள்.

Chairing the Members என்ற இந்த ஓவியம் தேர்தலில் வெற்றியடைந்த ஒரு வேட்பாளர் தன் வெற்றியைத் தொண்டர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதை பயங்கரக் கிண்டலுடன் காட்டுகிறது (படத்தின் ஒரு பகுதியைத்தான் மேலே பார்க்கிறீர்கள். முழுப் படத்தையும் பார்க்க படத்தை க்ளிக் செய்யுங்கள்).

ஒரே அமளியாக இருக்கும் இந்தக் கொண்டாட்டத்தில் அடிதடி நடக்கிறது; வேட்பாளரே கீழே விழும் நிலைமையில் இருக்கிறார். இந்தச் சரிவு இடப்பக்கம் நோக்கி திபுதிபு என்று ஓடும் பன்றிக் கூட்டத்தால் ஏற்பட்டிருக்கலாம்.

வலப்பக்கம் கழைக் கூத்தாடியின் கரடியின் முதுகில் ஏறிக்கொண்டு ஒரு குரங்கு வேடிக்கை பார்க்கிறது. குரங்குக்கு நேர் மேலே, மென்மையான இதயம் படைத்த ஒரு விக்டோரியப் பெண்மணி மொத்தக் காட்சியையும் தாங்க முடியாமல் மயக்கமாகிறார்; அவரது பணியாட்கள் மூக்கில் எதையோ வைத்து மயக்கத்தைத் தெளியவைக்க முயல்கிறார்கள். அவருக்கு அருகிலேயே இரண்டு பேர் ஒரு மண்டையோட்டையும் எலும்புகளையும் வைத்து ஏதோ விஷமம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இடப்பக்கமுள்ள வீட்டில் இருப்பவர்களுக்கோ கொண்டாட்டம்தான். விரைப்பான தோரணையோடு வீட்டுக்குள் உணவு கொண்டுபோகும் ஒரு சேவகரும் அவருக்குப் பின்னே இன்னொரு தட்டுடன் ஒரு மூன்று நாடி சரீரம் கொண்ட பெண்ணும் எஃபெக்ட் சேர்க்கிறார்கள். இவ்வளவு சிறிய வாராவதியில் இத்தனை நாடகம் நடக்கிறது.

இந்தப் படத்தின் மிகத் தூக்கலான கிண்டல் தொனிக்கு இதில் வரும் விலங்குகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. அவற்றின் வேலையே அவையும் படத்தில் வரும் மனிதர்களும் ஒன்று என ஓவியர் காட்டுவதற்கு உதவுவதுதான். படத்தில் இருக்கும் எல்லா அட்டூழியங்களையும் மனிதர்கள்தான் செய்கிறார்கள். கொண்டாட்டத்தில் விலங்குகளின் பங்களிப்பு எதுவும் இல்லை. இருந்தாலும் இந்த மாதிரி ஒரு வேடிக்கையான சூழலில் அவை இருப்பது அந்த வேடிக்கையை அதிகரிக்கத்தான் செய்கிறது.

வேட்பாளரின் தலைக்குச் சரியாக நேர் மேலே வாத்து ஒன்று ஏன் பறக்கிறது? இந்த ஓவியம், செதுக்கப்பட்ட படமாக (engraving) வந்தபோது அந்தப் படத்தின் அடியில் ஒரு கவிதையும் இருந்தது. வேட்பாளர் அமைச்சர் அவையில் வாத்து போல் கத்துவார் என்றது அந்தக் கவிதை.*

*Minerva’s sacred bird’s an owl;
Our Candidate’s, behold a fowl!
From which we readily suppose
(as now his generous Honour’s chose)
His voice he’ll in the Senate use;
And cackle, cackle, like – a goose.

Click to enlarge - கோதுமை வயல்: வான் கோக்
Wheatfield, 1888

பெரும்பாலும் புள்ளிகளையும் சிறிய மற்றும் பெரிய கோடுகளையும் வைத்து இந்த அற்புதமான படத்தை வரைந்திருக்கிறார் வான் கோக்.

இரண்டு வருடங்கள் கழித்து 1890இல் அவர் வரைந்த ‘காக்கைகளுடன் கோதுமை வயல்’ என்ற ஓவியம் இன்னும் பிரபலம். சதுர வடிவ கான்வாஸ்கள் இரண்டை சேர்த்து வைத்தது போன்ற ‘Double Square canvas’இல் இதை அவர் வரைந்திருக்கிறார்.

wheatfieldcrows.jpg
Wheatfield With Crows, 1890

மிக அடர்த்தியான தூரிகைத் தீற்றல்கள், குழம்பிய, இருண்ட ஆகாயம், வலப்பக்கத்திலிருந்து வரும் காக்கைக் கூட்டம் (ஒவ்வொரு காக்கையும் ஒன்றிரண்டு கோடுகளில் வரையப்பட்டிருக்கின்றன), ஒரு வித வேகத்துடன் நெளிந்து செல்லும் பாதைகள் ஆகியவை உணர்ச்சிவசப்பட்ட ஒரு மனநிலையைப் பிரதிபலிப்பது போல் இருக்கின்றன.

த ஸ்டாரி நைட்‘டில் இருப்பது போன்ற சுழலும் தீற்றல்களை இதில் (வானில்) பார்க்கலாம். படத்தின் இன்னொரு தலைப்பு: Wheatfield Under Threatening Skies.
இரண்டு ஓவியங்களும் பெரிதாக்கிப் பார்க்க வேண்டியவை.

headofthefamily_1921.jpg

ஜெர்மானியக் கலைஞர் ஜார்ஜ் கிராஸ் (George Grosz, 1893-1959) போரின் கொடூரங்கள், ஆட்சியாளர்களின் அதிகார வெறி, பணக்காரர்களின் பேராசை, சாதாரண மக்களின் அவலங்கள் போன்ற விஷயங்களை வரைந்தார்.

முதலாம் உலகப் போர் சமயத்தில் ஜெர்மனியில் நிலவிய குழப்பமான சூழலை கிராஸின் ஓவியங்களும் கோட்டுச் சித்திரங்களும் அழுத்தமாக சித்தரித்தன.

the-owners_1920.jpg

இந்தக் குரூரங்களை வர்ணிக்க கிராஸ் நளினமான, லாகவமான கோடுகளைப் பயன்படுத்தவில்லை. அவருடைய பாணி கரடுமுரடானது.

grosz2.jpg

அவருடைய படைப்புகளில் அதிகாரமும் பணமும் கொண்டவர்கள் அவலட்சணமான, வக்கிரமான மனிதர்களாக வருகிறார்கள். இந்த முகங்களை நாம் அடிக்கடி நிஜ வாழ்க்கையிலேயே பார்க்கலாம்.

ஒரு பக்கம் போரால் ஏற்பட்ட உடல் சேதங்கள், வறுமை, வேலையின்மை போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்ட மக்கள், இன்னொரு பக்கம் அதிகாரம், பணம், செக்ஸ் தவிர எந்த மதிப்பீடுகளும் இல்லாமல் கொண்டாடிக்கொண்டிருந்த மேல்தட்டு மக்கள் என்று சமூகத்தின் இரண்டு கோடிகளையும் சித்தரித்தார் கிராஸ்.

the_fluteplayer.gif

கிராஸின் ஓவியங்களை விடக் கோட்டுச் சித்திரங்கள் இன்றும் மிகப் பிரபலமாக இருக்கக் காரணம், அவற்றின் பண்படாத தன்மை மூலம் அவை சொல்லும் வலுவான செய்திதான்.

eh_grosz.jpg

childbirth_dubuffet.jpg
Childbirth, 1944

குழந்தைகள் வரையும் படங்களில் இருக்கும் எளிமையாலும் சுதந்திரமான கற்பனையாலும் ஈர்க்கப்பட்ட ஓவியர்கள் பலர்.

பிரெஞ்சு ஓவியர், சிற்பி ஜான் த்யுபுஃபேவை (Jean Dubuffet, 1901-1985) குழந்தைகள் மட்டுமல்ல, சிறைக் கைதிகள், மன நோயாளிகள் போன்றவர்களின் அமெச்சூர் படைப்புகளும் கவர்ந்தன.

ஒரு மனிதனின் படத்தை வரைந்தால் அவனுக்குக் கை இங்கே இருக்க வேண்டும், முகம் அங்கே இருக்க வேண்டும், இன்ன பொருளுக்கு இன்ன வண்ணம் கொடுக்க வேண்டும் என்பது போன்ற நிர்பந்தங்கள் குழந்தைகளுக்கு இல்லை. அவர்கள் எந்த இசத்தையும் பின்பற்றாமல் எல்லா இசங்களையும் சுலபமாகத் தங்கள் ‘படைப்புகளில்’ கொண்டுவருகிறார்கள். அவர்கள் பாணியைப் பயன்படுத்திக் கச்சிதமான ஒரு காட்சியைத் தருகிறார் த்யுபுஃபே.

படத்திற்கு நடுவில் மருத்துவமனைப் படுக்கை. இரண்டு பக்கமும் கிட்டத்தட்ட சமமான அகலமுள்ள இடத்தில் அனேகமாக அப்பாவும் ஹைஹீல்ஸ் போட்ட ஒரு சொந்தக்காரப் பெண்ணும் நிற்கிறார்கள்.

பிரசவிக்கும் பெண் ஆய்வுக் கூடத்தில் ஒட்டிவைக்கப்பட்ட தவளையின் போஸில் இருக்கிறாள். சுகப் பிரசவம் என்பதால் குழந்தை ஒழுங்காகத் தலை முதலில் வந்து தாயின் கால்களுக்கு நடுவில் தலைகீழாகப் படுத்திருக்கிறது. இது குரூப் ஃபோட்டோவில் இருப்பது போன்ற சந்தோஷமான ஒரு காட்சி.

தலையில் இல்லாமல் தலை மேல் இருக்கும் தொப்பி, உறவுக்காரப் பெண்ணின் கூந்தல், பெண்களின் கைகள், மார்பகங்கள் எல்லாம் குழந்தைத்தன்மையுடன் வரையப்பட்டிருக்கின்றன.

அப்பா ஜியாமெட்ரி பாக்ஸில் இருக்கும் கருவிகளின் உதவியுடன் உருவானது போல் அரை வட்டம், கோளம், நேரான கோடுகள் என்று டிப்டாப்பாகத் தோற்றமளிக்கிறார்.

பிரசவம் என்ற பெரியவர்களுக்கான சப்ஜெக்ட்டை குழந்தைகளுக்குரிய பாணியில் வரைவதே ஒரு irony. இதுதான் படத்தின் பெரிய பலம்.

attempting_the_impossible1928.jpg
Attempting the Impossible, 1928

கற்பனைக் காட்சிகளைத் தத்ரூபமாகவும் நுணுக்கமாகவும் வரைந்த பெல்ஜிய ஓவியர் ரெனே மாக்ரித் (René Magritte, 1898-1967), எம்.சி. எஷர் வகை. ஆனால் எஷரின் படைப்புகளை விடப் புதிரானவை இவரது ஓவியங்கள்.

Attempting the Impossible என்ற இந்த ஓவியத்தில் ஒரு இளம் ஆண் ஓவியன், தன் வயதையொத்த ஒரு பெண்ணை வரைகிறான். கான்வாஸில் அல்ல, தனது நிஜ உலகில். அவன் வரைவது உயிருள்ள பெண்ணை அல்ல, இருபரிமாண ஓவியத்தைத்தான்.

மாக்ரித் “impossible” என்று எதைச் சொல்கிறார்? ஓவியன் ஒரு மாடலின் உதவி இல்லாமலே வரைகிறான். ஓவியம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சீராக உருவாகிக்கொண்டுதான் இருக்கிறது. பிறகு எது சாத்தியமில்லாததாக இருக்க முடியும்?

பெண்ணைப் பற்றித் தனக்குள்ள விருப்பங்களுக்கு வடிவம் கொடுப்பது ஒரு ஆணுக்குக் கற்பனையில்தான் சாத்தியம் என்று மாக்ரித் சொல்கிறாரா? அந்தப் பெண்ணின் நிலைகுத்திய கண்களைப் பார்த்தால் அவள் வரைந்து முடிக்கப்பட்ட பின உயிர் பெறுவதற்கான சாத்தியம் இருப்பது போல் தெரியவில்லை.

பெண்ணின் வளர்ச்சி ஆணைப் பொறுத்ததாகத்தான் இருக்கிறது என்று மாக்ரித் பெண்ணியப் பார்வையில் இதை வரைந்திருக்கிறாரா?

ஓவியன் வரையும்போது அணிந்திருக்க வேண்டிய சாதாரண (மஃப்டி) உடையை அணியவில்லை. அலுவலகத்திற்கோ பார்ட்டிக்கோ போகும்போது அணிவதற்கான formal உடையில் இருக்கிறான். இந்த ஒரு விஷயமே அவன் ஓவியன் அல்ல என்பதையும் அவன் உருவாக்குவது ஓவியம் அல்ல என்பதையும் சொல்லிவிடுகிறது. அவனது படைப்பு உருவாவது கான்வாஸில் அல்ல. இந்த ஆணும் பெண்ணும் எதன் குறியீடுகள்?

மிகப் புதிரான ஒரு விஷயம்: இடது கையைக் கடைசியாக வரைவதைப் பார்த்தால் அவன் வலது பக்கம் தொடங்கியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஏன்?

மூளையைக் கசக்க வைக்கிறார் மாக்ரித்.

பின்னிணைப்பு: ‘தீர்க்க தரிசனம்’ என்ற இவரது இன்னொரு புகழ்பெற்ற ஓவியம்.

clairvoyance1936.jpg
Clairvoyance, 1936

drawinghands_small.jpg
Drawing Hands, 1948

எம்.சி. எஷரின் படைப்புகளிலேயே மிகப் பிரபலமானது ‘Drawing Hands’ என்ற இந்த லித்தோகிராஃப்தான் என்றால் அது மிகையாகாது.

முந்தைய எஷர் பதிவில் ‘ஊர்வன’ என்ற ஓவியத்தில் வருவது போல இந்தப் படத்திலும் டிராயிங் போர்டுதான் மேடை.

ஓன்றையொன்று வரைந்துகொள்ளும் இந்தக் கைகளில் எது நிஜக் கை? இரண்டுமே நிஜமாக இருக்க முடியாதுதான்.

முந்தைய பதிவில் உள்ள இரண்டு ஓவியங்களிலும் கற்பனையும் நிஜமும் ஓரிடத்தில் கலக்கின்றன. ‘வரையும் (அல்லது வரைந்துகொள்ளும்) கைக’ளில் நிஜம் வெறும் தோற்றமாக இருக்கிறது – படம் எவ்வளவுதான் தத்ரூபமாக வரையப்பட்டிருந்தாலும்.

இந்தப் புனைவிலும் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. இரண்டு கைகளும் சம உரிமைகளுடன் படைக்கப்படவில்லை. மேலே இருக்கும் வலது கைதான் ஒழுங்கான வரையும் பொசிஷனில் இருக்கிறது. பென்சிலை சரியாகப் பிடித்திருக்கிறது.

கீழே இருக்கும் இடது கை அது பென்சிலை அசௌகரியமாகப் பிடித்திருக்கிறது (கைகளுக்குச் சொந்தக்காரர் வலது கைப் பழக்கமுள்ளவர் என்று தெரிகிறது). இந்த லட்சணத்தில் அதனால் இவ்வளவு நுணுக்கமாக வரைய முடியாது. ஆகவே இடது கை வலது கையை வரைந்திருக்க முடியாது.

இந்த லாஜிக்படி பார்த்தால் வலது கைதான் தன்னை இடது கை வரைவது போல் வரைந்திருக்கிறது.

ஆனால் வலது கை, அதன் மணிக்கட்டிற்குக் கொஞ்சம் மேலிருந்துதான் நிஜம். ஆக, இப்பதிவின் தொடக்கத்திலேயே தீர்மானிக்கப்பட்டது போல, வலது கையும் கற்பனையே.

வலது கைப் பழக்கமுள்ள ஓவியரின் டிராயிங் போர்டில் உள்ள வரையும் தாளில் இன்னொரு டிராயிங் போர்டு.