attempting_the_impossible1928.jpg
Attempting the Impossible, 1928

கற்பனைக் காட்சிகளைத் தத்ரூபமாகவும் நுணுக்கமாகவும் வரைந்த பெல்ஜிய ஓவியர் ரெனே மாக்ரித் (René Magritte, 1898-1967), எம்.சி. எஷர் வகை. ஆனால் எஷரின் படைப்புகளை விடப் புதிரானவை இவரது ஓவியங்கள்.

Attempting the Impossible என்ற இந்த ஓவியத்தில் ஒரு இளம் ஆண் ஓவியன், தன் வயதையொத்த ஒரு பெண்ணை வரைகிறான். கான்வாஸில் அல்ல, தனது நிஜ உலகில். அவன் வரைவது உயிருள்ள பெண்ணை அல்ல, இருபரிமாண ஓவியத்தைத்தான்.

மாக்ரித் “impossible” என்று எதைச் சொல்கிறார்? ஓவியன் ஒரு மாடலின் உதவி இல்லாமலே வரைகிறான். ஓவியம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சீராக உருவாகிக்கொண்டுதான் இருக்கிறது. பிறகு எது சாத்தியமில்லாததாக இருக்க முடியும்?

பெண்ணைப் பற்றித் தனக்குள்ள விருப்பங்களுக்கு வடிவம் கொடுப்பது ஒரு ஆணுக்குக் கற்பனையில்தான் சாத்தியம் என்று மாக்ரித் சொல்கிறாரா? அந்தப் பெண்ணின் நிலைகுத்திய கண்களைப் பார்த்தால் அவள் வரைந்து முடிக்கப்பட்ட பின உயிர் பெறுவதற்கான சாத்தியம் இருப்பது போல் தெரியவில்லை.

பெண்ணின் வளர்ச்சி ஆணைப் பொறுத்ததாகத்தான் இருக்கிறது என்று மாக்ரித் பெண்ணியப் பார்வையில் இதை வரைந்திருக்கிறாரா?

ஓவியன் வரையும்போது அணிந்திருக்க வேண்டிய சாதாரண (மஃப்டி) உடையை அணியவில்லை. அலுவலகத்திற்கோ பார்ட்டிக்கோ போகும்போது அணிவதற்கான formal உடையில் இருக்கிறான். இந்த ஒரு விஷயமே அவன் ஓவியன் அல்ல என்பதையும் அவன் உருவாக்குவது ஓவியம் அல்ல என்பதையும் சொல்லிவிடுகிறது. அவனது படைப்பு உருவாவது கான்வாஸில் அல்ல. இந்த ஆணும் பெண்ணும் எதன் குறியீடுகள்?

மிகப் புதிரான ஒரு விஷயம்: இடது கையைக் கடைசியாக வரைவதைப் பார்த்தால் அவன் வலது பக்கம் தொடங்கியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஏன்?

மூளையைக் கசக்க வைக்கிறார் மாக்ரித்.

பின்னிணைப்பு: ‘தீர்க்க தரிசனம்’ என்ற இவரது இன்னொரு புகழ்பெற்ற ஓவியம்.

clairvoyance1936.jpg
Clairvoyance, 1936