வான் கோக்


Click to enlarge
The Church at Auvers, 1890

வான் கோகின் மிகப் பிரபலமான ஓவியங்களில் ஒன்று இது. ஓவேர் ஸ்யுர் வாஸ் (Auvers-sur-Oise) என்ற ஊரில் இருக்கும் ஒரு தேவாலயத்தை வரைந்திருக்கிறார்.

இந்த ஓவியத்தில் எல்லாமே இயக்கத்தில் இருக்கின்றன – இரண்டு பக்கமும் இருக்கும் பாதைகள், இடது பாதையில் நடக்கும் பெண், தேவாலயத்தின் சுவர்கள், கோபுரங்கள், புற்கள், சர்ச்சுக்குப் பின்னால் இருக்கும் மரங்கள், ஆகாயம் (வான் கோக் வரையும் ஆகாயத்தில் எப்போதும் ஏதோ ஒரு மர்மமான நடவடிக்கை நடந்துகொண்டிருக்கும்) என்று எல்லாமே உயிரோட்டத்துடன் இருக்கின்றன.

படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தால் தெரியும் – வளையாத, ஆனால் நேரான கோடுகள் குறுகிய பாதைகள் ஆகியிருக்கின்றன. கிடைமட்டமான, அடர்த்தியான சிறு கோடுகள் பூக்கள் ஆகியிருக்கின்றன. அவரது ‘கோதுமை வயல்‘ என்ற ஓவியத்தில் இருப்பது போல இதிலும் பெயின்ட் அங்கங்கே லேசாகத் துருத்திக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

படத்தில் நடுநாயகமாக இருப்பது அந்த இரண்டு ஜன்னல்கள். அவற்றுக்கு மேலும் அருகிலும் கூரைகள் கிட்டத்தட்ட கூம்பாக இருப்பதைக் கோணலாக்கிக் காட்டுகிறார் வான் கோக். அவரது பாணிப்படி பார்த்தால் கோபுரம் நேராகத்தான் இருக்கிறது.

இந்த ஓவியத்தைப் பார்ப்பவர் அந்த இரண்டு பாதைகளைத்தான் அதிக நேரம் பார்ப்பார் என்று நினைக்கிறேன். முதலில் கவனத்தை ஈர்ப்பவை அவைதான். அவை நம் பார்வையை அவை செல்லும் திசையோடு இழுத்துச் செல்கின்றன அந்தக் கோடுகள். இந்த இயக்கத்தில் ஒரு அவசரம் அல்லது வேகம் இருக்கிறது. இடப்பக்கப் பாதையில் நடக்கும் பெண் கூடப் பாவாடையைக் கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு படத்தில் இல்லாத வாசலை நோக்கி வேகமாக நடக்கிறாள்.

இவ்வளவையும் சாத்தியமாக்கியிருக்கும் வான் கோகின் டிரேட்மார்க் தூரிகைத் தீற்றல்கள் இந்தக் காட்சியைக் கான்வாஸில் பார்க்கும் உணர்வைத் தருகின்றன. அற்புதமான ஓவிய அனுபவம்.

Advertisements

Click to enlarge - கோதுமை வயல்: வான் கோக்
Wheatfield, 1888

பெரும்பாலும் புள்ளிகளையும் சிறிய மற்றும் பெரிய கோடுகளையும் வைத்து இந்த அற்புதமான படத்தை வரைந்திருக்கிறார் வான் கோக்.

இரண்டு வருடங்கள் கழித்து 1890இல் அவர் வரைந்த ‘காக்கைகளுடன் கோதுமை வயல்’ என்ற ஓவியம் இன்னும் பிரபலம். சதுர வடிவ கான்வாஸ்கள் இரண்டை சேர்த்து வைத்தது போன்ற ‘Double Square canvas’இல் இதை அவர் வரைந்திருக்கிறார்.

wheatfieldcrows.jpg
Wheatfield With Crows, 1890

மிக அடர்த்தியான தூரிகைத் தீற்றல்கள், குழம்பிய, இருண்ட ஆகாயம், வலப்பக்கத்திலிருந்து வரும் காக்கைக் கூட்டம் (ஒவ்வொரு காக்கையும் ஒன்றிரண்டு கோடுகளில் வரையப்பட்டிருக்கின்றன), ஒரு வித வேகத்துடன் நெளிந்து செல்லும் பாதைகள் ஆகியவை உணர்ச்சிவசப்பட்ட ஒரு மனநிலையைப் பிரதிபலிப்பது போல் இருக்கின்றன.

த ஸ்டாரி நைட்‘டில் இருப்பது போன்ற சுழலும் தீற்றல்களை இதில் (வானில்) பார்க்கலாம். படத்தின் இன்னொரு தலைப்பு: Wheatfield Under Threatening Skies.
இரண்டு ஓவியங்களும் பெரிதாக்கிப் பார்க்க வேண்டியவை.

starrynight.jpg
The Starry Night, 1889

டச்சு-பிரெஞ்சு ஓவியர் வான் கோக் (‘வான்கா’ அல்ல) படைத்த The Starry Night என்ற இந்த ஓவியம்தான் கலை என்று ஒரு உலகம் இருப்பதை எனக்குக் காட்டியது.

முதன்முதலில் இந்த ஓவியத்தைப் பார்த்து எனக்கு அதிர்ச்சியும் பரவசமும் ஏற்பட்டன. மனித இருப்பையும் இயக்கத்தையும் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் பிரபஞ்சம் (இயற்கை) தன்பாட்டுக்கு மும்முரமாக இயங்கிக்கொண்டிருக்கும் குரூரம் ‘ஸ்டாரி நைட்’டில் வெளிப்படுவதாக எனக்குத் தோன்றியது. அதனால்தான் அதிர்ச்சி.

பரவசம், இந்த ஓவியத்தின் அழகைப் பார்த்து வந்தது. ஓவியத்தின் இடது பக்கத்தை ஆக்கிரமித்திருக்கும் அந்த மரம், படத்தில் மூன்றில் இரண்டு பங்கைப் பிடித்திருக்கும் பெரிய நட்சத்திரங்கள், இரண்டிற்கும் இடையிலான மலைகள் என்று எல்லாமே சுழல்வதும் நெளிவதுமாகப் படு தீவிரத்துடன் இயங்கிக்கொண்டிருக்கின்றன. முதல் தடவை இந்தப் படத்தைப் பார்த்தபோது, கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்ததில் அதிலிருந்து மிகப் பெரிய ஓசை வருவது போலவே எனக்குத் தோன்றியது. ஓயாத ஒரு பேரியக்கத்திலிருந்து எழும் இரைச்சல் அது.

starrydetail.jpgவான் கோகின் டிரேட்மார்க்கான அடர்த்தியான, பிசிறான தீற்றல்களின் முரட்டுத் தன்மை, இந்த ஓவியம் சொல்லும் செய்தியின் குரூரத்தை அதிகரிக்கிறது.

ஸ்டாரி நைட்டிற்குப் பிறகு பல சிறந்த படைப்புகளைப் பார்த்தேன். ஆனால் ஸ்டாரி நைட் தந்த அனுபவம் வேறு எந்த ஓவியத்திலும் எனக்கு இது வரை கிடைக்கவில்லை.