கோட்டுச் சித்திரம்


picasso-drawing.jpg

“இதை யார் வேண்டுமானாலும் வரைய முடியுமே” வகை. கையெழுத்து கூடப் படத்தின் ஒரு பகுதி மாதிரி இருக்கிறது.

தலைப்பும் வரைந்த ஆண்டும் தெரியவில்லை. கண்டுபிடிக்க முடிந்தால் பிறகு சேர்க்கிறேன்.

Advertisements

Click to enlarge - கோதுமை வயல்: வான் கோக்
Wheatfield, 1888

பெரும்பாலும் புள்ளிகளையும் சிறிய மற்றும் பெரிய கோடுகளையும் வைத்து இந்த அற்புதமான படத்தை வரைந்திருக்கிறார் வான் கோக்.

இரண்டு வருடங்கள் கழித்து 1890இல் அவர் வரைந்த ‘காக்கைகளுடன் கோதுமை வயல்’ என்ற ஓவியம் இன்னும் பிரபலம். சதுர வடிவ கான்வாஸ்கள் இரண்டை சேர்த்து வைத்தது போன்ற ‘Double Square canvas’இல் இதை அவர் வரைந்திருக்கிறார்.

wheatfieldcrows.jpg
Wheatfield With Crows, 1890

மிக அடர்த்தியான தூரிகைத் தீற்றல்கள், குழம்பிய, இருண்ட ஆகாயம், வலப்பக்கத்திலிருந்து வரும் காக்கைக் கூட்டம் (ஒவ்வொரு காக்கையும் ஒன்றிரண்டு கோடுகளில் வரையப்பட்டிருக்கின்றன), ஒரு வித வேகத்துடன் நெளிந்து செல்லும் பாதைகள் ஆகியவை உணர்ச்சிவசப்பட்ட ஒரு மனநிலையைப் பிரதிபலிப்பது போல் இருக்கின்றன.

த ஸ்டாரி நைட்‘டில் இருப்பது போன்ற சுழலும் தீற்றல்களை இதில் (வானில்) பார்க்கலாம். படத்தின் இன்னொரு தலைப்பு: Wheatfield Under Threatening Skies.
இரண்டு ஓவியங்களும் பெரிதாக்கிப் பார்க்க வேண்டியவை.

headofthefamily_1921.jpg

ஜெர்மானியக் கலைஞர் ஜார்ஜ் கிராஸ் (George Grosz, 1893-1959) போரின் கொடூரங்கள், ஆட்சியாளர்களின் அதிகார வெறி, பணக்காரர்களின் பேராசை, சாதாரண மக்களின் அவலங்கள் போன்ற விஷயங்களை வரைந்தார்.

முதலாம் உலகப் போர் சமயத்தில் ஜெர்மனியில் நிலவிய குழப்பமான சூழலை கிராஸின் ஓவியங்களும் கோட்டுச் சித்திரங்களும் அழுத்தமாக சித்தரித்தன.

the-owners_1920.jpg

இந்தக் குரூரங்களை வர்ணிக்க கிராஸ் நளினமான, லாகவமான கோடுகளைப் பயன்படுத்தவில்லை. அவருடைய பாணி கரடுமுரடானது.

grosz2.jpg

அவருடைய படைப்புகளில் அதிகாரமும் பணமும் கொண்டவர்கள் அவலட்சணமான, வக்கிரமான மனிதர்களாக வருகிறார்கள். இந்த முகங்களை நாம் அடிக்கடி நிஜ வாழ்க்கையிலேயே பார்க்கலாம்.

ஒரு பக்கம் போரால் ஏற்பட்ட உடல் சேதங்கள், வறுமை, வேலையின்மை போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்ட மக்கள், இன்னொரு பக்கம் அதிகாரம், பணம், செக்ஸ் தவிர எந்த மதிப்பீடுகளும் இல்லாமல் கொண்டாடிக்கொண்டிருந்த மேல்தட்டு மக்கள் என்று சமூகத்தின் இரண்டு கோடிகளையும் சித்தரித்தார் கிராஸ்.

the_fluteplayer.gif

கிராஸின் ஓவியங்களை விடக் கோட்டுச் சித்திரங்கள் இன்றும் மிகப் பிரபலமாக இருக்கக் காரணம், அவற்றின் பண்படாத தன்மை மூலம் அவை சொல்லும் வலுவான செய்திதான்.

eh_grosz.jpg

பிகாசோவின் சரளமான கற்பனையும் எளிமையும் கைகோர்ப்பதைப் பற்றி என் முந்தைய பதிவான ‘உருவச் சித்திரம்: பிகாசோ’வில் சொல்லியிருந்தேன்.

காட்டாக இரண்டு கோட்டுச் சித்திரங்கள். பல பெரிய ஓவியர்களைப் போல பிகாசோவுக்கும் ஆந்தை பிடிக்கும். முதல் படம் அனேகமாக ஒரே கோட்டில் வரையப்பட்டிருக்கிறது. இரண்டாவது படம் – இது இன்னும் சிறப்பானது – ஒன்பது கோடுகளில் வரையப்பட்டிருக்கிறது.

 

owl_picasso.jpg
The Owl

owl2_picasso.jpg
Le Hibou, 1946

* பிரெஞ்சு மொழியில் ‘இபு’ என்றால் ஆந்தை.

pline.JPG
Portrait

பிகாசோவின் கோட்டுச் சித்திரங்களில் பலதும் மிக எளிமையானவை. நிறைய காலி இடம் இருக்கும். சில சித்திரங்கள் மிகச் சில கோடுகளில் முடிந்துவிடும். இந்த வகைப் படைப்புகளில் பலவற்றில் குகை ஓவியங்களின் எளிமையும் அழகும் இருக்கின்றன (பிகாசோவின் கலையைப் பல விஷயங்கள் நேரடியாக பாதித்திருக்கின்றன).

இன்னொரு விஷயம் நகைச்சுவை. தமாஷாக இருக்க வேண்டும் என்று பிகாசோ மெனக்கெட்டு அப்படியெல்லாம் வரைந்தாரா, அல்லது தமாஷ் ஒரு பின்விளைவா என்று தெரியவில்லை. அவரது வாழ்க்கை வரலாறுகளைப் படித்தால் தெரியலாம்.

‘இப்படி யார் வேண்டுமானாலும் வரையலாமே’ என்று சிலரை நினைக்க வைப்பது இந்தப் படங்களின் மிக முக்கியமான ஒரு அம்சம். மேலே இருக்கும் படமே அப்படிக் கேட்க வைக்கும்.

கொஞ்சமும் அக்கறையில்லாமல் படு அலட்சியமாக வரையப்பட்டிருப்பது போல் தெரியும் இந்தப் படம் பிகாசோவின் கற்பனை, சரளம், எளிமை ஆகியவற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு.

மேலும் சில உதாரணங்களை இங்கே போடலாம் என்று திட்டம். உருவப் படம் யாருடையது என்று தெரியவில்லை.