April 2007


Click to enlarge

Portrait of Fernande Olivier, 1905

கீஸ் வான் தோங்கன் (Kees van Dongen, 1877-1968) ஆந்த்ரே தெரேனைப் போல் இன்னொரு ஃபாவிச ஓவியர்.

இந்த அரை நிர்வாண உருவப் படம் யதார்த்த (அட்டை காப்பி) சித்தரிப்பாக இல்லை என்றாலும் இப்படிப்பட்ட ஒரு படத்திற்குரிய வசீகரம் இதில் வெளிப்பட்டுவிடுகிறது.

இடுப்பிற்குப் பின்பக்கம் கை வைத்துக்கொண்டு, பெரிய கவலை எதுவும் இல்லாமல், கழற்றிய ஆடையை ஒரு மார்பகம் தெரியக் கையில் வைத்துக்கொண்டு மிடுக்கான தோரணையில் நிற்கிறாள் இந்தப் பெண்.

வட்டமான முகத்தில் அடர்த்தியான, கிடைமட்டமான கருப்புக் கோடுகளாக (மை?) தெரியும் கண்கள்; தூக்கிய புருவம்; மூக்கின் மிகைப்படுத்தப்பட்ட நிழல், அதோடு இரண்டு புள்ளிகளில் உருவாகும் நாசித் துவாரங்கள்; ஓவியர் பெயின்ட்டைக் கொட்டியது போன்ற ரத்தச் சிவப்பான, அழகான உதடுகள்.

இவை இந்தப் படத்திற்குக் கவர்ச்சியைக் கொடுக்கின்றன. ‘ஃபெர்னாந்த் ஒலீவியே’வுக்குக் கூந்தல் குறைவாக இருப்பதால் படத்தில் சதைக்குக் கூடுதல் கவனம் கிடைக்கிறது. இந்த ஓவியத்தில் என்னை மிகவும் கவர்ந்தது முகம்தான்.

கலை வரலாற்றில் இந்தப் படத்திற்கு மட்டுமில்லை, இந்தப் பெண்ணுக்கும் இடம் இருக்கிறது. ஃபெர்னாந்த் ஒலீவியே, பிகாசோவின் முதல் காதலி. மேலும் விவரங்கள் இங்கே. ஃபெர்னாந்த் ஓவியத்தில்தான் அழகாக இருக்கிறார். Loving Picasso: The Private Journal of Fernande Olivier என்று ஒரு சுயசரிதை கூட எழுதியிருக்கிறார்.

Advertisements

picasso-drawing.jpg

“இதை யார் வேண்டுமானாலும் வரைய முடியுமே” வகை. கையெழுத்து கூடப் படத்தின் ஒரு பகுதி மாதிரி இருக்கிறது.

தலைப்பும் வரைந்த ஆண்டும் தெரியவில்லை. கண்டுபிடிக்க முடிந்தால் பிறகு சேர்க்கிறேன்.

derainvlaminck.jpg

Portrait of Maurice de Vlaminck, 1905

பிரெஞ்சு ஓவியர் ஆந்த்ரே தெரேன் (André Derain, 1880-1954), சக ஓவியர் மோரீஸ் த வ்ளாமிங்க்கை இப்படி வரைந்திருக்கிறார்.

தெரேன் ஃபாவிசம் (Fauvism) என்ற கலை இயக்கத்தைச் சேர்ந்தவர். எந்தக் காட்சியையும் அதற்குரிய வண்ணங்களில்தான் சித்தரிப்பது என்ற மரபை மீறிய ஃபாவிஸ்ட்டுகள் கலையுலகை ஒரு கலக்கு கலக்கினார்கள். என்றைக்காவது இவர்களைப் பற்றி விரிவாக எழுத விரும்புகிறேன்.

பென்சிலால் அல்லது வேறு பொருட்களால் வரைந்துவிட்டு ஓவியம் தீட்டுவது ஒரு வழக்கம். தெரேன் இந்தப் படத்தை நேரடியாகத் தூரிகையால் வரைந்திருக்கிறார். இதை முதலில் பென்சிலில் வரைவது சாத்தியமில்லை.

ஃபாவிஸ்ட்டுகளின் வண்ணப் பயன்பாட்டுக்கு உதாரணமாகப் படத்தில் இருப்பவரின் ஆரஞ்சு வண்ண மீசையைச் சொல்லலாம். முகத்தின் கீழ்ப் பாதியை வரைய தூரிகையால் இரண்டு மூன்று இழுப்புகள். கண்களுக்குச் சில வளைவுகள். மூக்கிற்கு ஒரு கோடு. தலைமுடிக்கும் ஆரஞ்சு வண்ணம். உருவத்திற்குப் பின்னணி எதுவும் இல்லை.

விளையாட்டாக வரைந்தது போல் தெரிந்தாலும் இந்த ஓவியத்தில் எல்லாமே இருக்கிறது. மிகக் குறைந்த details-உடன் வரையப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் details இல்லாமலில்லை. முகவாயில் சிறு குழி, பின்னந்தலைக்குச் செல்லும் தொப்பியின் விளிம்பு, வலது காது (இடது காது வெறும் தீற்றல்தான்), மூக்கின் வலப்பக்கம் விழும் நிழல், பளபளக்கும் இடது கண் (தாடைக்குக் கீழ் இருக்கும் பளீரென்ற வெள்ளைத் தீற்றல் கோட்டுக்குள்ளிருந்து தெரியும் சட்டையாக இருக்கலாம்) எல்லாம் விவரமாக வரையப்பட்டிருக்கின்றன. தலையைத் தவிர மற்றவற்றில் – சட்டை, பின்னணி – எந்த நுணுக்கமும் இல்லை.

ஃபாவிஸ்ட்டுகளுக்கு வான் கோகின் பாதிப்பு உண்டு. அது தெரேனின் மற்ற ஓவியங்களில் வெளிப்படும் அளவுக்கு இந்தப் படத்தில் தெரியவில்லை என்றாலும் அடர்த்தியான வண்ணங்களை தாராளமாகப் பயன்படுத்தியிருக்கும் விதம் வான் கோகை ஞாபகப்படுத்துவதாக எனக்குத் தோன்றுகிறது.

இந்த இடத்தில் ஒரு ஒப்புதல் வாக்குமூலம்: பொதுவாக எனக்கு உருவப் படங்களில் ஆர்வமில்லை. இந்த ஆர்வக் கோளாறையும் மீறி என்னை மிகவும் கவர்ந்த உருவப் படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்தை முதன்முதலில் பார்த்தபோது எனக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது!