drawinghands_small.jpg
Drawing Hands, 1948

எம்.சி. எஷரின் படைப்புகளிலேயே மிகப் பிரபலமானது ‘Drawing Hands’ என்ற இந்த லித்தோகிராஃப்தான் என்றால் அது மிகையாகாது.

முந்தைய எஷர் பதிவில் ‘ஊர்வன’ என்ற ஓவியத்தில் வருவது போல இந்தப் படத்திலும் டிராயிங் போர்டுதான் மேடை.

ஓன்றையொன்று வரைந்துகொள்ளும் இந்தக் கைகளில் எது நிஜக் கை? இரண்டுமே நிஜமாக இருக்க முடியாதுதான்.

முந்தைய பதிவில் உள்ள இரண்டு ஓவியங்களிலும் கற்பனையும் நிஜமும் ஓரிடத்தில் கலக்கின்றன. ‘வரையும் (அல்லது வரைந்துகொள்ளும்) கைக’ளில் நிஜம் வெறும் தோற்றமாக இருக்கிறது – படம் எவ்வளவுதான் தத்ரூபமாக வரையப்பட்டிருந்தாலும்.

இந்தப் புனைவிலும் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. இரண்டு கைகளும் சம உரிமைகளுடன் படைக்கப்படவில்லை. மேலே இருக்கும் வலது கைதான் ஒழுங்கான வரையும் பொசிஷனில் இருக்கிறது. பென்சிலை சரியாகப் பிடித்திருக்கிறது.

கீழே இருக்கும் இடது கை அது பென்சிலை அசௌகரியமாகப் பிடித்திருக்கிறது (கைகளுக்குச் சொந்தக்காரர் வலது கைப் பழக்கமுள்ளவர் என்று தெரிகிறது). இந்த லட்சணத்தில் அதனால் இவ்வளவு நுணுக்கமாக வரைய முடியாது. ஆகவே இடது கை வலது கையை வரைந்திருக்க முடியாது.

இந்த லாஜிக்படி பார்த்தால் வலது கைதான் தன்னை இடது கை வரைவது போல் வரைந்திருக்கிறது.

ஆனால் வலது கை, அதன் மணிக்கட்டிற்குக் கொஞ்சம் மேலிருந்துதான் நிஜம். ஆக, இப்பதிவின் தொடக்கத்திலேயே தீர்மானிக்கப்பட்டது போல, வலது கையும் கற்பனையே.

வலது கைப் பழக்கமுள்ள ஓவியரின் டிராயிங் போர்டில் உள்ள வரையும் தாளில் இன்னொரு டிராயிங் போர்டு.