ivillage-small.jpg

I and the Village, 1911

ருஷ்ய-பிரெஞ்சு ஓவியர் மார்க் ஷகாலின் (Marc Chagall) முக்கியமான ஓவியங்களில் ஒன்று இது. ஷகால் தனது கிராமத்துச் சூழலை இதில் காதலுடன் சித்தரித்திருக்கிறார்.

அவரும் ஒரு ஆடும் கண்ணோடு கண் பார்த்துக்கொண்டிருக்க, இந்தக் காட்சியிலேயே நிறைய இடைவெளி விட்டு வேறு பல காட்சிகளும் இருக்கின்றன. மாட்டிடம் பால் கறக்கும் பெண், நடந்து போகும் விவசாயி, தலைகீழாக நின்று வயலின் வாசிக்கும் பெண், ஒரு சர்ச், அதற்குள் அதன் பாதிரியார், தலைகீழாக இருக்கும் இரண்டு வீடுகள் போன்ற படிமங்கள் கிராமத்தின் மரபுகளில் ஊறிய தன்மை, நாட்டார் கற்பனை, கிராம வாழ்க்கை, அதன் சிநேகமான மனிதர்கள், இயற்கையுடன் ஒட்டிய, சிக்கல் இல்லாத வாழ்வு என்று பல விஷயங்களைப் பிரதிபலிக்கின்றன. இது ஒரு ரொமான்டிக்கான படம்தான்.

ஓவியத்திற்குக் கிட்டத்தட்ட நட்டநடுவில் ஓவியரின் புன்னகையையும் உள்ளடக்கிய ஒரு வட்டம் படத்தின் ரொமான்டிக் தன்மைக்கு வலு சேர்க்கிறது. வண்ணங்களை மிக அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார் ஷகால் (க்ளிக் செய்து பெரிய படமாக்கிப் பார்த்தால் தெரியும்).

மரபு சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை அவர் தன் காலத்திய ஓவிய உத்திகளைப் பயன்படுத்தி வரைந்திருக்கிறார்.

கீழ்க் காணப்படுவது அவரது ‘ஜன்னல் வழியே பாரிஸ்’ என்ற ஓவியம்.

paris_small.jpg
Paris Through the Window, 1913

‘நானும் எனது கிராமமும்’ ஓவியத்தோடு ஓப்பிட்டால் இந்தப் படத்தில் details குறைவாக இருக்கின்றன. தலைகீழாக ஓடும் ரயில், அந்தரத்தில் கிடைமட்டமாக நிற்கும் அல்லது நடக்கும் சீமான், சீமாட்டி, மனித முகமுள்ள பூனை, பாராசூட் வீரர் எல்லாம் அந்த கிராம ஓவியத்தின் காட்சிகளை நினைவுபடுத்தும் அதே சமயத்தில் அவை நகரத்துக்கே உரிய அம்சங்களாகவும் இருக்கின்றன.

சூழலின் அமைதியைக் காட்டும் மலர்கள் நாற்காலியில் இருக்கின்றன (கிராமத்துப் படத்தில் அவை ஓவியரின் கைகளில் இருந்தன). கிராமத்துக் கட்டிடங்களில் சில வீடுகள் தலைகீழாக இருக்கும். சிலவற்றிலிருந்து மனித முகம் எட்டிப் பார்க்கும். ஆனால் பாரிஸ் நகரக் கட்டிடங்கள் உணர்ச்சியற்றவையாக இருக்கின்றன. ஓவியரின் கையில் சிவப்பாக இதயச் சின்னம் இருந்தாலும் அவருக்கும் நகரத்திற்கேற்ப இரண்டு முகங்கள் தேவைப்படுகின்றன. இன்னும் கூட சொல்லிக்கொண்டே போகலாம்!

இந்த இரண்டு ஓவியங்களிலும் வண்ணங்களும் கற்பனையும் அற்புதமாக இருக்கின்றன. வீட்டுச் சுவரில் ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்க வேண்டியவை.

பின்னிணைப்பு: ஒரு வலையிதழுக்காக ஷகாலைப் பற்றி நான் எழுதிய அறிமுகம்.