fountain.JPG

The Fountain, 1917

கலையுலகில் வேறு எந்த நவீனக் கலைப் படைப்பையும் விட மிக அதிகத் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பு என்று இந்த டாய்லெட் கருதப்படுகிறது. இதை ‘உருவாக்கிய’ பிரெஞ்சுக் கலைஞர் மார்செல் த்யுஷாம் (Marcel Duchamp) இதை readymade என்று அழைத்தார்.

கலைஞரால் உருவாக்கப்படுவதற்கு பதிலாக தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுபவை என்பதால் அவை ரெடிமேடுகள்.

த்யுஷாம்ப்பின் ரெடிமேடுகள் எல்லாமே அவை வந்த காலத்தில் பரபரப்பையும் கண்டனத்தையும் கிளப்பின. கலை என்பது அழகாக இருக்க வேண்டும் என்ற ஒப்புக்கொள்ளப்பட்ட கோட்பாட்டை மீறுவதும் மரபுவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுப்பதும் அவருடைய நோக்கங்களாக இருந்தன.

கலையாக இல்லாத ஒரு பொருளைக் கலை என்று பெயரிட்டு கேலரியில் வைத்துக் கலைப் பொருளாக்குவதே அவர் உத்தி. படைப்பாளியின் திறமை, தனித்துவம் என்று ஒரு கலைப் பொருளுடன் இணைத்துப் பார்க்கப்படும் தன்மைகள் எதுவும் இருக்கக் கூடாது என்றுதான் அவர் ரெடிமேடுகள் என்ற புதிய கலை வடிவத்தை உருவாக்கினார்.

கீழ்க்கண்ட சைக்கிள் சக்கரம் அவருடைய இன்னொரு புகழ்பெற்ற ரெடிமேட்.

bicyclewheel1.jpg
The Bicycle Wheel, 1913

இன்னொன்று, புட்டிகளை அடுக்கும் ஸ்டாண்ட்:

bottlerack.jpg
Bottle Rack, 1914

த்யுஷாம் தன் ரெடிமேடுகளை உலகம் பிற்காலத்தில் மாபெரும் கலைப் படைப்புகளாகக் கொண்டாடியதைக் கிண்டல் செய்தார். தங்கள் கலைப் படைப்புகளைக் கண்காட்சிக்கு வைத்து அருகில் ஒரு சுத்தியலைத் தொங்க விட்டு, அந்த சுத்தியலால் தங்கள் படைப்புகளை உடைக்கும்படி பார்வையாளர்களிடம் சொன்ன ‘தாதா‘ என்ற சமூக இயக்கத்தின் உறுப்பினர் த்யுஷாம். இந்தப் பின்னணியில் அவர் பார்வையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இன்று இன்ஸ்டலேஷன்ஸ் (installations) என்று பொருட்களை மாட்டுவதும் அடுக்குவதும் அனேகமாக த்யுஷாம்ப்பின் ரெடிமேடுகளிலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும்.

ஆனால் ஒரு சைக்கிள் சக்கரமோ விளக்குமாறோ கலைப் படைப்பு என்ற பெயரில் கேலரிக்கு வந்துவிட்டால் அது பார்வையாளரின் பிரச்சினை ஆகிவிடுகிறது.

மேலே இருக்கும் சைக்கிள் சக்கரம் ஒரு ஸ்டூலில் தலைகீழாகப் பொருத்தப்பட்டிருக்கிறது. இது பாதிதான் ரெடிமேடு. அல்லது இது இரண்டு ரெடிமேடுகளின் காம்பினேஷன். நகரும் இயக்கத்தைக் குறிக்கும் சக்கரத்தை, இயக்கத்தை நிறுத்தும் பொருளான ஸ்டூலில் வலுக்கட்டாயமாகப் பொருத்தும் முரண்பாட்டை ரசிக்கலாம்.

அந்த பாட்டில் ஸ்டாண்டைப் பாருங்கள். அதில் ஒரு ஒழுங்கும் மேல்நோக்கிய இயக்கத்தைக் குறிக்கும் அமைப்பும் இருக்கின்றன. அதை ஒரு உலோகச் சிற்பம் என்றால் நம்பலாம்.

சென்னை மாக்ஸ் முல்லர் பவனில் நடந்த கண்காட்சி ஒன்றில் அதை முதன்முதலில் பார்த்தபோது அது பாட்டில் ஸ்டாண்ட் என்று எனக்குத் தெரியாது. அதைப் பற்றி நான் சொன்ன அந்த இரண்டு குணங்கள்தான் என்னை ஈர்த்தன. அதற்குப் பிறகே அதன் கீழ் bottle rack என்று எழுதி ஒட்டியிருந்ததைப் பார்த்தேன். த்யுஷாம்ப்பின் நோக்கத்தை என்னைப் போல் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் முறியடித்திருப்பார்கள்.

பி.கு.:

த்யுஷாம்ப் L.H.O.O.Q. என்ற பெயரில் மோனா லிசாவுக்கு மீசை-தாடி வைத்து ஓவியம் வரைந்ததும் பிறகு ஒரிஜினல் மோனா லிசாவையே L.H.O.O.Q. Shaved என்ற பெயரில் ரிலீஸ் செய்ததும் வரலாறு.

த்யுஷாம் 1923இல் கலையை ஏறக்கட்டிவிட்டு செஸ் ஆடுவதில் மூழ்கினார். ஆனால் அவரது படைப்புகளைப் பற்றி இப்போதும் புத்தகம் புத்தகமாக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். முக்கியமான, சுவாரஸ்யமான சில இணைப்புகள்:

» tout-fait
» Unmaking the Museum: Marcel Duchamp’s Readymades in Context
» Marcel Duchamp World Community
» Readymades of Marcel Duchamp

Advertisements