மார்க் ஷகால் (1887-1985)

“ஓவியனின் சிறகுகளைக் கொண்ட கவிஞன்”

சர்ரியலிச ஓவியராக அறியப்படும் மார்க் ஷகாலை (Marc Chagall) பற்றி அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி மில்லர் பரவசத்துடன் சொன்ன வார்த்தைகள் இவை.

chagall.jpgருஷ்யாவில் பிறந்த பிரெஞ்சு ஓவியரான ஷகால் ‘சர்ரியலிஸ்ட்’ என்றாலும் இவரது ஓவிய பாணி மிகவும் தனித்தன்மை கொண்டது. சர்ரியலிசக் கலைக்குரிய அமானுஷ்யத் தன்மை, பயத்தைக் கிளறும் நிலப்பரப்புகள் போன்ற வழக்கமான அம்சங்களை இவரிடம் பார்க்க முடியாது. ஆனால் சர்ரியலிசக் கலையின் முக்கியக் கூறான கனவுத்தன்மையும் யதார்த்தத்தை மீறிய கற்பனையும் ஷகாலிடம் உண்டு.

பெரிய சர்ரியலிச ஓவியர்களின் படைப்புகளில் காணப்படும் அதிர்ச்சியூட்டும் படிமங்கள் ஷகாலில் இல்லை. மாறாக ஒரு வித ரொமான்டிசிசம் உண்டு.

ஷகாலின் ஓவியங்கள் நம்மால் புரிந்துகொள்ள முடிகிற, ரம்மியமான ஒரு கிராம வாழ்க்கையைச் சித்தரிக்கின்றன. இவரது காலகட்டத்தில் வாழ்ந்த முக்கியமான கலைஞர்கள் பெரும்பாலானோர் தொழில்மயமாக்கம், நகர வாழ்க்கை, நவீனமயமாக்கம், யுத்தங்கள், இவை அத்தனைக்குமான விளைவுகள் ஆகியவற்றின் வலுவான தாக்கத்தில் அவற்றின் பல்வேறு பரிமாணங்களைத் தீவிரமாகப் பதிவு செய்துகொண்டிருந்தபோது, இவர் அதீதக் கற்பனையுடன், செழுமையான வண்ணத்தில் கிராம வாழ்க்கையின் அம்சங்களைக் காட்டினார்.

இந்த ஓவியங்களில் ஆன்மீகம் கலந்திருந்தது, இவற்றில் அவரது கிராமத்தில் புழங்கிவந்த கதைகளும் இருந்தன. சர்ரியலிச ஓவியங்களில் ஒரு முக்கியமான அம்சம் அவற்றின் கதைத்தன்மை. ஒவ்வொரு ஓவியத்திலும் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கும். இதற்கு ஷகாலின் “பிறந்தநாள்” (1915) ஒரு நல்ல உதாரணம்.

வாழ்க்கை

1887ல் ருஷ்யாவில் விதெப்ஸ்க் கிராமத்தில் பிறந்தார் (இது இப்போது பெலாரஸில் இருக்கிறது). 1907இல் ஷகால் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் இருந்த ‘கலை ஆதரவாளர்கள் கூட்டமைப்’பில் நிக்கோலாய் ரரிச்சிடம் பயின்றார். அங்கே தற்கால ருஷ்ய ஓவியக் கலையில் ஈர்க்கப்பட்டார் அவர். அவரது ஓவிய பாணி இங்குதான் உருவாகத் தொடங்கியது.

selfportrait1914.jpgகலைக் கல்வி முடிந்தபின் அவர் 1910இல் பாரிஸுக்குச் சென்றார். பாரிஸில் அவர் பிரெஞ்சுக் கவிஞர் கிலோம் அப்போலினேர் உள்படப் பல கவிஞர்களையும் கலைஞர்களையும் சந்தித்தார். தனது கிராமத்தைக் காட்டும் பல அற்புதமான ஓவியங்களை அவர் இந்தக் காலகட்டத்தில் உருவாக்கினார். அவரது கலைக்குரிய பல்வேறு அம்சங்கள் உருவாயின. தொழிலாளிகள், இசைக் கலைஞர்கள், விலங்குகள், பறவைகள் எல்லாம் அவரது ஓவியங்களில் அதிக அளவில் இடம்பெறத் தொடங்கினார்கள்.

1914இல் பெர்லினில் அவர் தனது சோலோ கண்காட்சி ஒன்றை நடத்தினார். பிறகு விதெப்ஸ்க்கிற்குத் திரும்பினார். முதலாம் உலகப் போர் தொடங்கியதும் அவர் தன் கிராமத்தை விட்டுச் செல்லவில்லை. 1915இல் ஷகால் தன் காதலி பெலா ரோசன்ஃபெல்டைத் திருமணம் செய்துகொண்டார் (தனது மிகச் சிறந்த ஓவியங்களில் ஒன்றான ‘பிறந்தநாளை’ இந்த ஆண்டில்தான் வரைந்தார்).

1917இல் ஷகால் ருஷ்யப் புரட்சியில் தீவிரமாகச் செயல்பட்டார். சோவியத் கலாச்சார அமைச்சகம் அவரை விதெப்ஸ்க் பகுதிக்கான் கலைத் துறை ஆணையர் ஆக்கியது. அங்கே ஒரு கலைப் பள்ளியைத் தொடங்கிய ஷகாலுக்கு சோவியத் அமைப்பு ஒத்துவரவில்லை. 1920இல் மாஸ்கோவுக்குச் சென்ற அவர், அங்கிருந்து பெர்லினுக்குச் சென்று செதுக்கும் கலையைக் கற்றார். 1923இல் அவர் மீண்டும் பாரிஸுக்குத் திரும்பினார்.

1931இல் பைபிளுக்காகச் சித்திரங்கள் வரையத் தொடங்கினார். அவர் பாலஸ்தீனுக்கு அழைக்கப்பட்டு அங்கே சென்றார். பாலஸ்தீன் அவருக்கு பைபிள் தொடர்பான கற்பனைக்கு உதவியது. அவர் வரைந்த இந்தச் சித்திரங்கள் 1956இல்தான் வெளியிடப்பட்டன. 1939இல் அவருக்கு கார்னெகி விருது தரப்பட்டது.

ஷகால் 1941-48 ஆகிய வருடங்களைத் தவிர பாரிஸில்தான் வாழ்ந்தார். இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனி பிரான்சை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. யூதர்களை நாஜிகள் மரண முகாம்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். ஷகால் பிரான்சிலிருந்து லிஸ்பன் வழியாக அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார்.

1944இல் அவரது மனைவி பெலா இறந்தார். அடுத்த ஒன்பது மாதங்கள் எதுவும் செய்யாமல் பெலாவின் படைப்புகளை ‘ஏற்றிய விளக்குகள்’ என்ற தலைப்பில் கொண்டுவருவதில் மூழ்கினார். 1946ல் நியூயார்க் நவீனக் கலை அருங்காட்சியகம் அவரது கலைப் படைப்புகள் அனைத்தையும் வைத்து ஒரு மிகப் பெரிய கண்காட்சி நடத்தியது. இதற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்ததும் சிகாகோவிலும் ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

1948இல் மகிழ்ச்சியுடன் பாரிஸுக்குத் திரும்பிச் சென்றார் ஷகால். 1951இல் கல்லில் சிற்பங்கள் வடித்தார் அவர். 1952ல் வாலாந்த்தீன் பிராட்ஸ்கியைச் சந்தித்தார், திருமணம் செய்துகொண்டார், அவருடன் கிரீஸ் சென்றார்.

ஷகாலின் ஓவிய பாணி வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்களை அடைந்து வந்தது. அவர் புத்தகங்களுக்குச் சித்திரங்கள் வரையத் தொடங்கினார். பைபிள் தொடர்பான புத்தகங்களுக்கு அவர் வரைந்த சித்திரங்கள் அவரது படைப்புகளில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன.

ஷகால் 1985இல் தனது 98ஆவது வயதில் இறந்தார். அவரது உடல் பிரான்சில் நீஸ் அருகே செந்த் போல் த வான்ஸில் உள்ள செந்த் போல் நகர இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

ஷகால் ஆயில், வாட்டர் கலர், குவாஷ் (gouache), மொசைக் என்று பல மீடியாக்களைப் பயன்படுத்தியிருக்கிறார். அவரது சுவரோவியங்கள், ஸ்டெயின்டு கிளாஸ் ஓவியங்கள், வாட்டிகனில் அவர் செய்த அலங்கார வடிவமைப்புகள் ஆகியவையும் அவரது கற்பனையின் வீச்சைக் காட்டுபவை. கிரேக்கக் காவியமான ‘ஒடிசி’, நிக்கோலாய் கோகலின் ‘இறந்த ஆன்மாக்கள்’, பிரெஞ்சு எழுத்தாளர் லா ஃபோந்தெனின் விலங்குக் கதைகள் போன்ற முக்கியமான புத்தகங்களுக்குச் சித்திரங்கள் தந்திருக்கிறார். ஷகால் கார்ட்டூன்கள் கூட வரைந்திருக்கிறார்.

1922இல், மிக இளம் வயதில் அவர் எழுதிய சுயசரிதையான ‘என் வாழ்க்கை’ கவிதை போன்ற உரைநடையில் இருக்கிறது. ஷகால் பற்றி மேலும் அறியவும் அவரது படைப்புகளைப் பார்க்கவும் Ingo F. Walther எழுதி Taschen வெளியீடாக வந்த Marc Chagall என்ற புத்தகம் நல்ல தொடக்கம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s