Click to enlarge

Portrait of Fernande Olivier, 1905

கீஸ் வான் தோங்கன் (Kees van Dongen, 1877-1968) ஆந்த்ரே தெரேனைப் போல் இன்னொரு ஃபாவிச ஓவியர்.

இந்த அரை நிர்வாண உருவப் படம் யதார்த்த (அட்டை காப்பி) சித்தரிப்பாக இல்லை என்றாலும் இப்படிப்பட்ட ஒரு படத்திற்குரிய வசீகரம் இதில் வெளிப்பட்டுவிடுகிறது.

இடுப்பிற்குப் பின்பக்கம் கை வைத்துக்கொண்டு, பெரிய கவலை எதுவும் இல்லாமல், கழற்றிய ஆடையை ஒரு மார்பகம் தெரியக் கையில் வைத்துக்கொண்டு மிடுக்கான தோரணையில் நிற்கிறாள் இந்தப் பெண்.

வட்டமான முகத்தில் அடர்த்தியான, கிடைமட்டமான கருப்புக் கோடுகளாக (மை?) தெரியும் கண்கள்; தூக்கிய புருவம்; மூக்கின் மிகைப்படுத்தப்பட்ட நிழல், அதோடு இரண்டு புள்ளிகளில் உருவாகும் நாசித் துவாரங்கள்; ஓவியர் பெயின்ட்டைக் கொட்டியது போன்ற ரத்தச் சிவப்பான, அழகான உதடுகள்.

இவை இந்தப் படத்திற்குக் கவர்ச்சியைக் கொடுக்கின்றன. ‘ஃபெர்னாந்த் ஒலீவியே’வுக்குக் கூந்தல் குறைவாக இருப்பதால் படத்தில் சதைக்குக் கூடுதல் கவனம் கிடைக்கிறது. இந்த ஓவியத்தில் என்னை மிகவும் கவர்ந்தது முகம்தான்.

கலை வரலாற்றில் இந்தப் படத்திற்கு மட்டுமில்லை, இந்தப் பெண்ணுக்கும் இடம் இருக்கிறது. ஃபெர்னாந்த் ஒலீவியே, பிகாசோவின் முதல் காதலி. மேலும் விவரங்கள் இங்கே. ஃபெர்னாந்த் ஓவியத்தில்தான் அழகாக இருக்கிறார். Loving Picasso: The Private Journal of Fernande Olivier என்று ஒரு சுயசரிதை கூட எழுதியிருக்கிறார்.

picasso-drawing.jpg

“இதை யார் வேண்டுமானாலும் வரைய முடியுமே” வகை. கையெழுத்து கூடப் படத்தின் ஒரு பகுதி மாதிரி இருக்கிறது.

தலைப்பும் வரைந்த ஆண்டும் தெரியவில்லை. கண்டுபிடிக்க முடிந்தால் பிறகு சேர்க்கிறேன்.

derainvlaminck.jpg

Portrait of Maurice de Vlaminck, 1905

பிரெஞ்சு ஓவியர் ஆந்த்ரே தெரேன் (André Derain, 1880-1954), சக ஓவியர் மோரீஸ் த வ்ளாமிங்க்கை இப்படி வரைந்திருக்கிறார்.

தெரேன் ஃபாவிசம் (Fauvism) என்ற கலை இயக்கத்தைச் சேர்ந்தவர். எந்தக் காட்சியையும் அதற்குரிய வண்ணங்களில்தான் சித்தரிப்பது என்ற மரபை மீறிய ஃபாவிஸ்ட்டுகள் கலையுலகை ஒரு கலக்கு கலக்கினார்கள். என்றைக்காவது இவர்களைப் பற்றி விரிவாக எழுத விரும்புகிறேன்.

பென்சிலால் அல்லது வேறு பொருட்களால் வரைந்துவிட்டு ஓவியம் தீட்டுவது ஒரு வழக்கம். தெரேன் இந்தப் படத்தை நேரடியாகத் தூரிகையால் வரைந்திருக்கிறார். இதை முதலில் பென்சிலில் வரைவது சாத்தியமில்லை.

ஃபாவிஸ்ட்டுகளின் வண்ணப் பயன்பாட்டுக்கு உதாரணமாகப் படத்தில் இருப்பவரின் ஆரஞ்சு வண்ண மீசையைச் சொல்லலாம். முகத்தின் கீழ்ப் பாதியை வரைய தூரிகையால் இரண்டு மூன்று இழுப்புகள். கண்களுக்குச் சில வளைவுகள். மூக்கிற்கு ஒரு கோடு. தலைமுடிக்கும் ஆரஞ்சு வண்ணம். உருவத்திற்குப் பின்னணி எதுவும் இல்லை.

விளையாட்டாக வரைந்தது போல் தெரிந்தாலும் இந்த ஓவியத்தில் எல்லாமே இருக்கிறது. மிகக் குறைந்த details-உடன் வரையப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் details இல்லாமலில்லை. முகவாயில் சிறு குழி, பின்னந்தலைக்குச் செல்லும் தொப்பியின் விளிம்பு, வலது காது (இடது காது வெறும் தீற்றல்தான்), மூக்கின் வலப்பக்கம் விழும் நிழல், பளபளக்கும் இடது கண் (தாடைக்குக் கீழ் இருக்கும் பளீரென்ற வெள்ளைத் தீற்றல் கோட்டுக்குள்ளிருந்து தெரியும் சட்டையாக இருக்கலாம்) எல்லாம் விவரமாக வரையப்பட்டிருக்கின்றன. தலையைத் தவிர மற்றவற்றில் – சட்டை, பின்னணி – எந்த நுணுக்கமும் இல்லை.

ஃபாவிஸ்ட்டுகளுக்கு வான் கோகின் பாதிப்பு உண்டு. அது தெரேனின் மற்ற ஓவியங்களில் வெளிப்படும் அளவுக்கு இந்தப் படத்தில் தெரியவில்லை என்றாலும் அடர்த்தியான வண்ணங்களை தாராளமாகப் பயன்படுத்தியிருக்கும் விதம் வான் கோகை ஞாபகப்படுத்துவதாக எனக்குத் தோன்றுகிறது.

இந்த இடத்தில் ஒரு ஒப்புதல் வாக்குமூலம்: பொதுவாக எனக்கு உருவப் படங்களில் ஆர்வமில்லை. இந்த ஆர்வக் கோளாறையும் மீறி என்னை மிகவும் கவர்ந்த உருவப் படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்தை முதன்முதலில் பார்த்தபோது எனக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது!

1945இல் பிகாசோ முதல் முதலாக லித்தோகிரஃபி (lithography – அச்சோவியக் கலை) கற்றுக்கொண்டு அந்த மீடியத்தில் பல ஓவியங்களை உருவாக்கினார். அதில் எருது என்ற இந்தத் தொடர் புகழ் பெற்றது.

இந்தத் தொடரில் ஒரு எருதை வரைந்துவிட்டு அதைப் படிப்படியாக எளிமையாக்கி, கடைசியில் அவரது ஆந்தைகள் போல மிகச் சில கோடுகளே இருக்கும் எளிமையான வடிவத்தில் முடிக்கிறார்…

1

bull1.jpg

2

bull2.jpg

3

bull3.jpg

4

bull4.jpg

எருதின் உருமாற்றம் வேகம் பிடிக்கிறது. உடலின் மேடு-பள்ளங்கள் முக்கோணங்களாக, சாய் சதுரங்களாக, இன்னும் பல ஜியோமித (geometric) வடிவங்களாக மாறுகின்றன. பிகாசோ யதார்த்தத்தை உருத் திரிக்க (distort செய்ய) தொடங்குகிறார். வலது காதையும் கண்களையும் பாருங்கள். ஒரு ஓவியத்தின் லே அவுட் போலிருக்கிறது இந்த நிலை.

5

bull5.jpg

6

bull6.jpg

இந்தத் தொடர் எந்தத் திசையில் போய்க்கொண்டிருக்கிறது என்று இந்தப் படத்தை வைத்தே ஊகித்துவிடலாம், இதில் சஸ்பென்ஸ் எதுவும் இல்லை என்றாலும்.

7

bull7.jpg

ஏழாம் நிலையில் எருது முப்பரிமாணத் தன்மை குறைந்து கோட்டோவியமாக மாறிக்கொண்டிருக்கிறது. முதுகில் தொடங்கிக் கால்கள் வரை செல்வது போன்ற சில சீரான கோடுகளால் ஆகியிருக்கிறது இந்த எருது. முழு உருமாற்றம் பெறுவதற்கு இன்னும் சில இடங்கள்தான் மிச்சம். முந்தைய படத்தில் தலையாக இருந்தது இப்போது கண் ஆகியிருக்கிறது.

8

bull8.jpg

மீண்டும் பல மாற்றங்கள். மேலும் பல பரிசோதனைகள்…

9

bull9.jpg

எருது முழுமையான கோட்டோவியம் ஆகியிருக்கிறது. எளிமையானாலும் எருதின் கம்பீரம் அப்படியே இருக்கிறது. இதில் ‘எடிட்’ செய்ய வேண்டியவை காதும் வாலும்தான்.

10

bull10.jpg

மிகச் சில கோடுகளில் வரையப்பட்ட இந்த அழகான படம்தான் கடைசிக் கட்டம் போல் தெரியும். ஆனால் இன்னும் ஒன்று மிச்சமிருக்கிறது.

11

bull11.jpg

முற்றும். முழுமையான குகை ஓவியம் உருவாகிவிட்டது.

11 ஓவியங்களைக் கொண்ட இந்தத் தொடரைப் பின்னோக்கிய வரிசையில் பார்த்தால் இன்னொரு தொடர் கிடைக்கும்.

Click to enlarge
The Church at Auvers, 1890

வான் கோகின் மிகப் பிரபலமான ஓவியங்களில் ஒன்று இது. ஓவேர் ஸ்யுர் வாஸ் (Auvers-sur-Oise) என்ற ஊரில் இருக்கும் ஒரு தேவாலயத்தை வரைந்திருக்கிறார்.

இந்த ஓவியத்தில் எல்லாமே இயக்கத்தில் இருக்கின்றன – இரண்டு பக்கமும் இருக்கும் பாதைகள், இடது பாதையில் நடக்கும் பெண், தேவாலயத்தின் சுவர்கள், கோபுரங்கள், புற்கள், சர்ச்சுக்குப் பின்னால் இருக்கும் மரங்கள், ஆகாயம் (வான் கோக் வரையும் ஆகாயத்தில் எப்போதும் ஏதோ ஒரு மர்மமான நடவடிக்கை நடந்துகொண்டிருக்கும்) என்று எல்லாமே உயிரோட்டத்துடன் இருக்கின்றன.

படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தால் தெரியும் – வளையாத, ஆனால் நேரான கோடுகள் குறுகிய பாதைகள் ஆகியிருக்கின்றன. கிடைமட்டமான, அடர்த்தியான சிறு கோடுகள் பூக்கள் ஆகியிருக்கின்றன. அவரது ‘கோதுமை வயல்‘ என்ற ஓவியத்தில் இருப்பது போல இதிலும் பெயின்ட் அங்கங்கே லேசாகத் துருத்திக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

படத்தில் நடுநாயகமாக இருப்பது அந்த இரண்டு ஜன்னல்கள். அவற்றுக்கு மேலும் அருகிலும் கூரைகள் கிட்டத்தட்ட கூம்பாக இருப்பதைக் கோணலாக்கிக் காட்டுகிறார் வான் கோக். அவரது பாணிப்படி பார்த்தால் கோபுரம் நேராகத்தான் இருக்கிறது.

இந்த ஓவியத்தைப் பார்ப்பவர் அந்த இரண்டு பாதைகளைத்தான் அதிக நேரம் பார்ப்பார் என்று நினைக்கிறேன். முதலில் கவனத்தை ஈர்ப்பவை அவைதான். அவை நம் பார்வையை அவை செல்லும் திசையோடு இழுத்துச் செல்கின்றன அந்தக் கோடுகள். இந்த இயக்கத்தில் ஒரு அவசரம் அல்லது வேகம் இருக்கிறது. இடப்பக்கப் பாதையில் நடக்கும் பெண் கூடப் பாவாடையைக் கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு படத்தில் இல்லாத வாசலை நோக்கி வேகமாக நடக்கிறாள்.

இவ்வளவையும் சாத்தியமாக்கியிருக்கும் வான் கோகின் டிரேட்மார்க் தூரிகைத் தீற்றல்கள் இந்தக் காட்சியைக் கான்வாஸில் பார்க்கும் உணர்வைத் தருகின்றன. அற்புதமான ஓவிய அனுபவம்.

Click to enlarge

The Great Wave off Kanagawa, 1832

ஜப்பானிய ஓவியர் கத்சுஷீகா ஹொகுசாய் (Katsushika Hokusai, 1760-1849) உருவாக்கிய மர அச்சோவியங்களில் (wood block prints) மிகப் புகழ்பெற்றது இது. அலைகளை இவரை விட அதிகக் கற்பனையுடன் யாரும் வரைய முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.

இடப்பக்கம் முழுவதையும் ஆக்கிரமிக்கும் பிரம்மாண்டமான அலையின் ‘விளிம்புகள்’ எதையோ பிடிக்கச் செல்லும் கைகள் போன்ற மிரட்டலுடன் வலப்பக்கம் நோக்கிப் பாய்கின்றன. அவற்றின் இலக்கு(கள்), கடல் அலைகளுக்கிடையே தத்தளிக்கும் மூன்று படகுகள்.

இந்த ராட்சத அலைக்கும் வலப்பக்கம் பாதி மறைந்திருக்கும் அலைக்கு நடுவில் இருக்கிறது ஃப்யூஜி மலை. இது மாபெரும் மலை, ஆனால் படத்தில் அலைதான் ஹீரோ.

மலை அமைதியாக, இரண்டு அலைகளுக்கு நடுவில் இருக்கிறது. இது கிட்டத்தட்ட படத்திற்கு நடுவில் இருப்பது போன்ற தோற்றத்தைத்தான் தருகிறது. ராட்சத அலை, அதற்குக் கொஞ்சம் முன்னால் இருக்கும் சிறிய அலை, இரண்டின் நுனிகளும் சுவையான கற்பனையோடு விலாவரியாக வரையப்பட்டிருக்கின்றன. ராட்சத அலையின் முகட்டிற்கு நேர் கீழே சின்ன அலையின் முகடு வருகிறது.

இயற்கையின் ஏஜென்ட்களான கடலும் மலையும் இப்படி குரூப் ஃபோட்டோவில் வைப்பது போல் படத்தில் இடம் பார்த்து ஒரு ஒழுங்குடன் வைக்கப்பட்டிருக்கின்றன. படத்தில் ஒழுங்கு எதுவும் இல்லாமல் மகா அலங்கோலமாக இருப்பது அந்த மூன்று படகுகள்தான். இடப்பக்கம் தெரியும் படகு கொஞ்சம் பக்கவாட்டில் சாய்ந்து உள்ளே இருப்பது தெரிகிறது. மற்ற இரண்டு படகுகளும் அவற்றில் இருக்கும் மனிதர்களைத்தான் காட்டுகின்றன. அவர்கள் சிக்கியிருக்கும் பயங்கர ஆபத்தை இந்த அலங்கோலம் விவரிக்கிறது.

இந்த ஓவியம் எளிமையாகவும், அதே சமயத்தில் நுட்பமாகவும் இருப்பது இதன் சிறப்புகளில் ஒன்று. அலைகளின் நுனிகளை அவற்றிலிருந்து சிதறும் நுரையுடன் நுட்பமாக வரைந்திருக்கிறார் ஹொகுசாய். மிகச் சிறிதாகத் தெரியும் மனித முகங்களில் கூடக் கண், மூக்கு, வாய் எல்லாம் இருக்கின்றன. அதே சமயம் ஓவியத்தின் மற்ற உறுப்புகளை அதிகம் வர்ணிக்காமல் (details இல்லாமல்) வரைந்திருக்கிறார்.

ஓவியத்தில் எல்லா ஆக்‍ஷனும் இடப்பக்கத்தில்தான் நடக்கிறது. வலப்பக்கத்தில் எந்த வர்ணனையும் இல்லை. வானமும் வெறுமையாகத்தான் இருக்கிறது.

படத்தில் அவர் பெரும்பகுதிக்கு வெளிர் வண்ணங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். அலைகளின் உட்பகுதிக்கும் மலையின் அடிப்பகுதிக்கும் மட்டும் கருப்பு வண்ணம்.

Click to enlarge
Dynamism of a Dog on a Leash, 1912

ஒரு சீமாட்டி தன் நாயை இழுத்துச் செல்வதைக் காட்டும் இந்தப் படம் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கிறது. வரைந்தவர் இத்தாலிய ஓவியர் ஜாக்கோமோ பாலா (Giacomo Balla, 1871-1958).

Dynamism of a Dog on a Leash என்ற தலைப்பே ஓவியரின் நோக்கத்தைச் சொல்கிறது. சங்கிலியால் கட்டி இழுத்துச் செல்லப்படும் நாய், சங்கிலி, சீமாட்டியின் கால்கள், இருவரும் மிக வேகமாக நடக்கும் தரை ஆகியவை இயங்குவதைச் சித்தரிக்கிறார் பாலா.

இயக்கத்தை உறைய வைத்து வரைவது பாலாவும் அவரது காலத்து ஓவியர்களும் தொடர்ந்து செய்துகொண்டிருந்த ஒரு வேலை. இந்த flip book எஃபெக்ட் அந்தக் காலத்திலேயே புகைப்படத்தில் சாத்தியம் என்றாலும் அது இந்த ஓவியத்தைப் போல அழகாக இருக்க முடியாது.

ஒரு பணக்காரப் பெண், விலையுயர்ந்த ஒரு நாயை சங்கிலியால் கட்டி இழுத்துச் செல்லும் காட்சியை பல ஃப்ரேம்கள் கொண்ட ஒரு புகைப்படமாகக் கற்பனை செய்து பார்த்தாலும் இந்த ஓவியத்தின் நேர்த்தி அதில் வர முடியும் என்று தோன்றவில்லை.

ஓவியர் இயக்கம் என்ற வறட்சியான ஒரு ‘சயின்ஸ்’ சமாச்சாரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு அலங்காரத் தன்மையைச் சேர்த்து அதை மேலும் சுவாரஸ்யமாக்குகிறார்.

நாயின் கால்கள், வால் இரண்டாலும் உருவாகும் அரை வட்டங்களும் அந்தச் சங்கிலியால் ஏற்படும் வடிவங்களும் இந்தக் காட்சியில் இயந்திரத்தனம் இல்லாமல் பார்த்துக்கொள்கின்றன. அவர்களின் இயக்கத்தில் மறைமுகமாகப் பங்கு பெறும் தரை கூட சமதளமாக இருப்பது போல் ஒரு தோற்றம் வருகிறது.

இந்த ஓவியம் வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன் வந்த இன்னொரு மிகப் பிரபலமான ஓவியம், மார்செல் த்யுஷாம்ப்பின் ‘மாடிப் படிகளில் இறங்கும் நிர்வாணப் பெண்’…

nudestaircase_small.jpg
Nude Descending a Staircase, 1911