Portrait of Maurice de Vlaminck, 1905
பிரெஞ்சு ஓவியர் ஆந்த்ரே தெரேன் (André Derain, 1880-1954), சக ஓவியர் மோரீஸ் த வ்ளாமிங்க்கை இப்படி வரைந்திருக்கிறார்.
தெரேன் ஃபாவிசம் (Fauvism) என்ற கலை இயக்கத்தைச் சேர்ந்தவர். எந்தக் காட்சியையும் அதற்குரிய வண்ணங்களில்தான் சித்தரிப்பது என்ற மரபை மீறிய ஃபாவிஸ்ட்டுகள் கலையுலகை ஒரு கலக்கு கலக்கினார்கள். என்றைக்காவது இவர்களைப் பற்றி விரிவாக எழுத விரும்புகிறேன்.
பென்சிலால் அல்லது வேறு பொருட்களால் வரைந்துவிட்டு ஓவியம் தீட்டுவது ஒரு வழக்கம். தெரேன் இந்தப் படத்தை நேரடியாகத் தூரிகையால் வரைந்திருக்கிறார். இதை முதலில் பென்சிலில் வரைவது சாத்தியமில்லை.
ஃபாவிஸ்ட்டுகளின் வண்ணப் பயன்பாட்டுக்கு உதாரணமாகப் படத்தில் இருப்பவரின் ஆரஞ்சு வண்ண மீசையைச் சொல்லலாம். முகத்தின் கீழ்ப் பாதியை வரைய தூரிகையால் இரண்டு மூன்று இழுப்புகள். கண்களுக்குச் சில வளைவுகள். மூக்கிற்கு ஒரு கோடு. தலைமுடிக்கும் ஆரஞ்சு வண்ணம். உருவத்திற்குப் பின்னணி எதுவும் இல்லை.
விளையாட்டாக வரைந்தது போல் தெரிந்தாலும் இந்த ஓவியத்தில் எல்லாமே இருக்கிறது. மிகக் குறைந்த details-உடன் வரையப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் details இல்லாமலில்லை. முகவாயில் சிறு குழி, பின்னந்தலைக்குச் செல்லும் தொப்பியின் விளிம்பு, வலது காது (இடது காது வெறும் தீற்றல்தான்), மூக்கின் வலப்பக்கம் விழும் நிழல், பளபளக்கும் இடது கண் (தாடைக்குக் கீழ் இருக்கும் பளீரென்ற வெள்ளைத் தீற்றல் கோட்டுக்குள்ளிருந்து தெரியும் சட்டையாக இருக்கலாம்) எல்லாம் விவரமாக வரையப்பட்டிருக்கின்றன. தலையைத் தவிர மற்றவற்றில் – சட்டை, பின்னணி – எந்த நுணுக்கமும் இல்லை.
ஃபாவிஸ்ட்டுகளுக்கு வான் கோகின் பாதிப்பு உண்டு. அது தெரேனின் மற்ற ஓவியங்களில் வெளிப்படும் அளவுக்கு இந்தப் படத்தில் தெரியவில்லை என்றாலும் அடர்த்தியான வண்ணங்களை தாராளமாகப் பயன்படுத்தியிருக்கும் விதம் வான் கோகை ஞாபகப்படுத்துவதாக எனக்குத் தோன்றுகிறது.
இந்த இடத்தில் ஒரு ஒப்புதல் வாக்குமூலம்: பொதுவாக எனக்கு உருவப் படங்களில் ஆர்வமில்லை. இந்த ஆர்வக் கோளாறையும் மீறி என்னை மிகவும் கவர்ந்த உருவப் படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்தை முதன்முதலில் பார்த்தபோது எனக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது!

April 7, 2007 at 7:49 am
எனக்கு த்ரிஷாவைப் பார்த்தால்தான் பைத்தியம் பிடிக்கிறது.
April 7, 2007 at 3:22 pm
அதுச் சரி!
April 7, 2007 at 3:33 pm
நீங்கள் நாகர்கோவில்காரரா? தேவையில்லாத இடத்தில் எல்லாம் ஒற்றுப்போடுகிறீர்களே?
April 7, 2007 at 4:14 pm
பாத்த உடனே “என்னாடா இது”னு மனசுக்குள்ள நினைக்கவக்கிற படம் தான்…
என்ன கட்டியக்காரரே… உங்கள் பைத்தியம்… பிரியப் பைத்தியமா? கடுப்புப் பைத்தியமா?
April 19, 2007 at 8:38 pm
[...] வான் தோங்கன் (Kees van Dongen, 1877-1968) ஆந்த்ரே தெரேனைப் போல் இன்னொரு ஃபாவிச [...]
June 13, 2007 at 1:51 am
நல்லதொரு வலைப்பதிவு. ரவிசங்கர் ஊடாக வந்தேன்.
நிறைய அறிமுகப்படுத்துகிறீர்கள்.
இப்படத்தில் படத்தின் வலப்பக்கத்தில் தொப்பிக்கு மேலாகத் தெரியும் சிறுதொகுதி தலைமுடி குழப்புகிறதே? அல்லது அது தலைமுடியில்லையா?
June 13, 2007 at 7:10 pm
பின்புலத்தைத்தான் கொஞ்சம் டார்க்காக வரைந்திருக்கிறார்! வருகைக்கு நன்றி!