வான் கோகின் மிகப் பிரபலமான ஓவியங்களில் ஒன்று இது. ஓவேர் ஸ்யுர் வாஸ் (Auvers-sur-Oise) என்ற ஊரில் இருக்கும் ஒரு தேவாலயத்தை வரைந்திருக்கிறார்.
இந்த ஓவியத்தில் எல்லாமே இயக்கத்தில் இருக்கின்றன – இரண்டு பக்கமும் இருக்கும் பாதைகள், இடது பாதையில் நடக்கும் பெண், தேவாலயத்தின் சுவர்கள், கோபுரங்கள், புற்கள், சர்ச்சுக்குப் பின்னால் இருக்கும் மரங்கள், ஆகாயம் (வான் கோக் வரையும் ஆகாயத்தில் எப்போதும் ஏதோ ஒரு மர்மமான நடவடிக்கை நடந்துகொண்டிருக்கும்) என்று எல்லாமே உயிரோட்டத்துடன் இருக்கின்றன.
படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தால் தெரியும் – வளையாத, ஆனால் நேரான கோடுகள் குறுகிய பாதைகள் ஆகியிருக்கின்றன. கிடைமட்டமான, அடர்த்தியான சிறு கோடுகள் பூக்கள் ஆகியிருக்கின்றன. அவரது ‘கோதுமை வயல்‘ என்ற ஓவியத்தில் இருப்பது போல இதிலும் பெயின்ட் அங்கங்கே லேசாகத் துருத்திக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
படத்தில் நடுநாயகமாக இருப்பது அந்த இரண்டு ஜன்னல்கள். அவற்றுக்கு மேலும் அருகிலும் கூரைகள் கிட்டத்தட்ட கூம்பாக இருப்பதைக் கோணலாக்கிக் காட்டுகிறார் வான் கோக். அவரது பாணிப்படி பார்த்தால் கோபுரம் நேராகத்தான் இருக்கிறது.
இந்த ஓவியத்தைப் பார்ப்பவர் அந்த இரண்டு பாதைகளைத்தான் அதிக நேரம் பார்ப்பார் என்று நினைக்கிறேன். முதலில் கவனத்தை ஈர்ப்பவை அவைதான். அவை நம் பார்வையை அவை செல்லும் திசையோடு இழுத்துச் செல்கின்றன அந்தக் கோடுகள். இந்த இயக்கத்தில் ஒரு அவசரம் அல்லது வேகம் இருக்கிறது. இடப்பக்கப் பாதையில் நடக்கும் பெண் கூடப் பாவாடையைக் கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு படத்தில் இல்லாத வாசலை நோக்கி வேகமாக நடக்கிறாள்.
இவ்வளவையும் சாத்தியமாக்கியிருக்கும் வான் கோகின் டிரேட்மார்க் தூரிகைத் தீற்றல்கள் இந்தக் காட்சியைக் கான்வாஸில் பார்க்கும் உணர்வைத் தருகின்றன. அற்புதமான ஓவிய அனுபவம்.

March 26, 2007 at 1:51 am
//இந்த ஓவியத்தைப் பார்ப்பவர் அந்த இரண்டு பாதைகளைத்தான் அதிக நேரம் பார்ப்பார் என்று நினைக்கிறேன். //
ஓவியத்தைப் பற்றி நுணுக்கமாய் விபரித்தெழுதியதைப் படித்து படித்து ‘அப்படித் தானா’ என மேலே செக் பண்ணினதில்.. எதை அதிக நேரம் பார்த்தது என்பது சொல்ல முடியவில்லை!
//அற்புதமான ஓவிய அனுபவம்.//
அற்புதமான வாசிப்பு அனுபவம் :-)
ஓவியரின் பெயர் உச்சரிப்பு முறை அனேகமான தமிழ் அறிமுகங்களில் “வான் கோ” என்றுதான் எழுதி படித்ததுண்டு… i think its silent h.
\\
keep writing.
March 26, 2007 at 1:28 pm
vɪnˈsɛnt vɑnˈxɔx என்கிறது விக்கிபீடியா. ‘கோக்’-இல் வரும் ‘க்’ ஜெர்மனில் வரும் ‘ch’, ஸ்பானிஷ் மொழியின் x ஒலி போல ஹ-வும் (க்)க-வும் கலந்த ஓர் ஒலி. தமிழில் எளிமையாக க் போட்டுவிடலாம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
March 26, 2007 at 5:21 pm
நல்ல ஒவியம், நல்ல விளக்கம். நீங்கள் சொல்வது போல வானத்தில் ஏதோ மர்ம நடவடிக்கை நடந்து கொண்டுதான் இருக்கிறது. கொஞ்சம் பயமாகக்கூட இருக்கிறது.
March 26, 2007 at 5:32 pm
ஆமாம், ominous என்பதைத் தமிழில் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் அந்த மேட்டரை விட்டுவிட்டேன்.
March 26, 2007 at 5:55 pm
எனக்குப் புரிந்தவரை வான்கோகின் எல்லா ஓவியங்களிலும் அந்த ominous தன்மை இருப்பதாகத் தோன்றுகிறது. அப்படியா?
March 26, 2007 at 7:29 pm
பலவற்றில் சோகம், மிதமிஞ்சிய விரக்தி, துயரம், ஜன்னி பிடித்தது போல ஒரு வேகம் இதெல்லாம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. சிலவற்றில் எந்த உணர்ச்சியும் கலக்காதது போலும் இருக்கிறது. ஸ்டாரி நைட் அப்படித்தானே?
June 13, 2007 at 2:08 am
அதிகநேரம் என்பதைவிட முதலில் கவனத்தைப் பெறுவது அப்பாதைகள்தாம் எனச் சொல்லலாம்.
எமது பார்வையில் வலப்பக்கக் கட்டடத் தொகுதியின் உச்சியிலிருக்கும் சிலுவை அல்லது சிலை இடப்பக்கத்தில் இல்லை.
பொதுவாக தேவாலயங்கள் சமச்சீரமைப்பைப் பேணுபவை. எனவே இடப்பக்கமும் உச்சியில் சிலுவை வந்திருக்கவேண்டும். கவனக்குறைவால் மேலும் உச்சி மொட்டையாக இருந்து எந்தத் தேவாலயத்தையும் பார்த்த ஞாபகமில்லை.
தவறவிடப்பட்டதா அல்லது ஏதாவது சேதியிருக்கிறதா?
மற்றும்படி, பொடிச்சி சொன்னதுபோல அற்புதமான வாசிப்பு அனுபவம்.
தொடர்ந்து எழுதுங்கள்.
June 13, 2007 at 7:14 pm
வான் கோக் வேண்டுமென்றே மொட்டையாக வரைந்திருக்க மாட்டார். இந்த வகை ஓவியர்கள் (’எக்ஸ்ப்ரஷனிஸ்ட்கள்’) நுணுக்கமான விவரங்களுடன் வரைவதில்லை. யதார்த்தபூர்வமான சித்தரிப்புகளை விட உணர்ச்சிகளை அழுத்தமாக வெளிப்படுத்தும் பாணி இவர்களுடையது.