The Great Wave off Kanagawa, 1832
ஜப்பானிய ஓவியர் கத்சுஷீகா ஹொகுசாய் (Katsushika Hokusai, 1760-1849) உருவாக்கிய மர அச்சோவியங்களில் (wood block prints) மிகப் புகழ்பெற்றது இது. அலைகளை இவரை விட அதிகக் கற்பனையுடன் யாரும் வரைய முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.
இடப்பக்கம் முழுவதையும் ஆக்கிரமிக்கும் பிரம்மாண்டமான அலையின் ‘விளிம்புகள்’ எதையோ பிடிக்கச் செல்லும் கைகள் போன்ற மிரட்டலுடன் வலப்பக்கம் நோக்கிப் பாய்கின்றன. அவற்றின் இலக்கு(கள்), கடல் அலைகளுக்கிடையே தத்தளிக்கும் மூன்று படகுகள்.
இந்த ராட்சத அலைக்கும் வலப்பக்கம் பாதி மறைந்திருக்கும் அலைக்கு நடுவில் இருக்கிறது ஃப்யூஜி மலை. இது மாபெரும் மலை, ஆனால் படத்தில் அலைதான் ஹீரோ.
மலை அமைதியாக, இரண்டு அலைகளுக்கு நடுவில் இருக்கிறது. இது கிட்டத்தட்ட படத்திற்கு நடுவில் இருப்பது போன்ற தோற்றத்தைத்தான் தருகிறது. ராட்சத அலை, அதற்குக் கொஞ்சம் முன்னால் இருக்கும் சிறிய அலை, இரண்டின் நுனிகளும் சுவையான கற்பனையோடு விலாவரியாக வரையப்பட்டிருக்கின்றன. ராட்சத அலையின் முகட்டிற்கு நேர் கீழே சின்ன அலையின் முகடு வருகிறது.
இயற்கையின் ஏஜென்ட்களான கடலும் மலையும் இப்படி குரூப் ஃபோட்டோவில் வைப்பது போல் படத்தில் இடம் பார்த்து ஒரு ஒழுங்குடன் வைக்கப்பட்டிருக்கின்றன. படத்தில் ஒழுங்கு எதுவும் இல்லாமல் மகா அலங்கோலமாக இருப்பது அந்த மூன்று படகுகள்தான். இடப்பக்கம் தெரியும் படகு கொஞ்சம் பக்கவாட்டில் சாய்ந்து உள்ளே இருப்பது தெரிகிறது. மற்ற இரண்டு படகுகளும் அவற்றில் இருக்கும் மனிதர்களைத்தான் காட்டுகின்றன. அவர்கள் சிக்கியிருக்கும் பயங்கர ஆபத்தை இந்த அலங்கோலம் விவரிக்கிறது.
இந்த ஓவியம் எளிமையாகவும், அதே சமயத்தில் நுட்பமாகவும் இருப்பது இதன் சிறப்புகளில் ஒன்று. அலைகளின் நுனிகளை அவற்றிலிருந்து சிதறும் நுரையுடன் நுட்பமாக வரைந்திருக்கிறார் ஹொகுசாய். மிகச் சிறிதாகத் தெரியும் மனித முகங்களில் கூடக் கண், மூக்கு, வாய் எல்லாம் இருக்கின்றன. அதே சமயம் ஓவியத்தின் மற்ற உறுப்புகளை அதிகம் வர்ணிக்காமல் (details இல்லாமல்) வரைந்திருக்கிறார்.
ஓவியத்தில் எல்லா ஆக்ஷனும் இடப்பக்கத்தில்தான் நடக்கிறது. வலப்பக்கத்தில் எந்த வர்ணனையும் இல்லை. வானமும் வெறுமையாகத்தான் இருக்கிறது.
படத்தில் அவர் பெரும்பகுதிக்கு வெளிர் வண்ணங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். அலைகளின் உட்பகுதிக்கும் மலையின் அடிப்பகுதிக்கும் மட்டும் கருப்பு வண்ணம்.

March 18, 2007 at 6:21 pm
காலச்சுவடு வெளியிட்ட ஒரு புத்தகத்தின் அட்டையில்கூட இந்தப் படம் இடம்பெற்றிருந்ததாக ஞாபகம்.
March 19, 2007 at 3:25 pm
இந்தப் படம் நம்மூர்க்காரர்கள் கண்ணில்தான் அவ்வளவாகப் படவில்லை. வெளிநாடுகளில் விளம்பரங்களில் அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறார்கள்.