அடர்த்தியான வண்ணங்கள், மெலிந்த, நீண்ட கோடுகள் ஜெர்மானிய ஓவியரான எர்ன்ஸ்ட் லுட்விக் கிர்ஹ்னரின் (Ernst Ludvig Kirchner, 1880-1938) பாணி.
பரபரப்பான சதுக்கம் ஒன்றை வர்ணிக்கும் இந்தப் படத்தில் ஒன்றையொன்று முட்டிக்கொண்டு நிற்கும் பேருந்துகள், சாலை, கட்டிடங்கள், மனிதர்களை எல்லாம் பட்டையான வண்ணங்களாலும் கருப்புக் கோடுகளாலும் வரைந்திருக்கிறார் கிர்ஹ்னர்.
ஓவியத்தின் மேற்பகுதியில் இருக்கும் கட்டிடங்கள், வலப்பக்கம் உள்ள வளைவு, நடைபாதையின் ஓரம் ஆகிய இடங்களில் அலட்சியமாகவும் அநாவசியமாகவும் கிறுக்கப்பட்டது போல் வரையப்பட்டிருக்கும் அடர்த்தியான கோடுகள், படத்தில் பளிச்சென்று தெரியும் வண்ணங்களையும் மீறி ஒரு கோட்டுச் சித்திரத்தின் தன்மையைச் சேர்க்கின்றன. இந்தக் காட்சி நிஜம் அல்ல, பிம்பம் என்று நினைவுபடுத்துவது போல் இந்தக் கோடுகள் இருக்கின்றன.
‘நோலண்டோர்ஃப்ப்ளாட்ஸ்’ என்பது பெர்லினில் இருக்கும் ஒரு இடம் என்று கூகிள் தேடலில் தெரிந்தது.
