
ஜெர்மானியக் கலைஞர் ஜார்ஜ் கிராஸ் (George Grosz, 1893-1959) போரின் கொடூரங்கள், ஆட்சியாளர்களின் அதிகார வெறி, பணக்காரர்களின் பேராசை, சாதாரண மக்களின் அவலங்கள் போன்ற விஷயங்களை வரைந்தார்.
முதலாம் உலகப் போர் சமயத்தில் ஜெர்மனியில் நிலவிய குழப்பமான சூழலை கிராஸின் ஓவியங்களும் கோட்டுச் சித்திரங்களும் அழுத்தமாக சித்தரித்தன.

இந்தக் குரூரங்களை வர்ணிக்க கிராஸ் நளினமான, லாகவமான கோடுகளைப் பயன்படுத்தவில்லை. அவருடைய பாணி கரடுமுரடானது.

அவருடைய படைப்புகளில் அதிகாரமும் பணமும் கொண்டவர்கள் அவலட்சணமான, வக்கிரமான மனிதர்களாக வருகிறார்கள். இந்த முகங்களை நாம் அடிக்கடி நிஜ வாழ்க்கையிலேயே பார்க்கலாம்.
ஒரு பக்கம் போரால் ஏற்பட்ட உடல் சேதங்கள், வறுமை, வேலையின்மை போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்ட மக்கள், இன்னொரு பக்கம் அதிகாரம், பணம், செக்ஸ் தவிர எந்த மதிப்பீடுகளும் இல்லாமல் கொண்டாடிக்கொண்டிருந்த மேல்தட்டு மக்கள் என்று சமூகத்தின் இரண்டு கோடிகளையும் சித்தரித்தார் கிராஸ்.

கிராஸின் ஓவியங்களை விடக் கோட்டுச் சித்திரங்கள் இன்றும் மிகப் பிரபலமாக இருக்கக் காரணம், அவற்றின் பண்படாத தன்மை மூலம் அவை சொல்லும் வலுவான செய்திதான்.
