எம்.சி. எஷர் (M.C. Escher, 1898-1972) வரைந்த இந்த அச்சோவியத்தின் (lithograph) கரு, எஷருக்குப் பிடித்த சப்ஜெக்ட். அவரது மிகப் பிரபலமான பல படைப்புகள், நிஜத்தையும் கற்பனையையும் – அல்லது வைரமுத்து பாஷையில் சொன்னால் உண்மையையும் பொய்யையும் – பிரிக்கும் எல்லைக் கோடு அழிக்கப்படுவதைக் காட்டுகின்றன.
‘ஊர்வன’ என்று தலைப்பிலேயே பொடி இருப்பது போல் தோன்றுகிறது. ஊர்வன என்று பன்மையில் தலைப்பு வைத்திருப்பது ஒரு வசதிக்காக இருக்கலாம். இந்தப் படம் ஒரே பிராணியின் பயணத்தில் பல கட்டங்களை விவரிக்கிறது என்று வைத்துக்கொண்டால், பார்வையாளரை திசைதிருப்பவும் பன்மையில் தலைப்பு வைக்கப்பட்டிருக்கலாம்.
வரையும் பலகையில் உள்ள ஒரு ஓவியத்திலிருந்து morph ஆகிக் கிளம்பி குண்டுப் புத்தகம் > வரையும் கருவி > பேப்பர் வெயிட் (?) > உலோகத் தொட்டி என்ற பாதையில் செல்லும் இவை, மீண்டும் வரையும் பலகையில் இறங்கிக் கற்பனையில் கலக்கின்றன. மீண்டும் பலகையை விட்டு வெளியே வந்து அடுத்த சுற்றுப் பயணத்தைத் தொடங்குகின்றன. குறிப்பிட்ட இலக்கில் கொண்டுசெல்லும் இலக்கற்ற, முடிவற்ற பயணம் இது.
கணிதம், இயற்பியல், விண் இயற்பியல் போன்ற துறைகளில் ஆழமான ஈடுபாடு கொண்டிருந்த எஷர், தன் படைப்புகளில் அந்தத் துறைகளுக்குரிய சிந்தனைகளை, கோட்பாடுகளைச் சித்தரிக்கிறார். ‘ஊர்வன’விலும் அறிவியல் வாசனை இருக்கிறது. எனக்கு அறிவியல் வாசனை இல்லை என்பதால் படத்தில் முடிவின்மை, நிச்சயமின்மை, ஒழுங்கு (symmetry சரியான வார்த்தை – பலகையில் உள்ள ஜந்துக்கள் அலங்காரமாகப் பரவிக் கிடப்பதைப் பாருங்கள்) போன்ற விஷயங்களை மேலோட்டமாகப் பார்த்துப் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்த அச்சோவியத்தில் பொதிந்திருக்கும் தத்துவ சமாச்சாரங்கள ஒரு பக்கம் இருக்க, இது மிக நுணுக்கமாக வரையப்பட்டிருப்பது சுவாரஸ்யம். மினியேச்சர் முதலைகள் போலிருக்கும் இந்த ஜந்துக்கள் அமைதியாக நடத்தும் அபத்த நாடகத்தில் பங்கேற்காத Book of Job, செடித் தொட்டி, மது (?) புட்டி, அதை மூடியிருக்கும் கார்க், கண்ணாடிக் கோப்பை, நிறைய படிக்கப்பட்டுப் பழையதான புத்தகம், பிறகு குண்டுப் புத்தகத்தில் ஏறும் விலங்கின் வலது கால் ஆகியவை எல்லாம் பிரமிப்பூட்டும் அளவுக்கு நுட்பமாக, யதார்த்தமாக வரையப்பட்டிருக்கின்றன.
பேப்பர் வெயிட் மேல் இருக்கும் ஜந்து கார்ட்டூன் பாணியில் பெருமூச்சு விடாமல் இருந்திருந்தால் இந்தக் காட்சியில் உறைந்து போனது போல் ஒரு தன்மை இருந்திருக்கலாம். எனவே அந்தப் பெருமூச்சு படத்திற்கு ஒரு இயக்கத்தைக் கொடுக்கிறது என்று சொல்லலாம்.
இந்த ஜந்துக்களை முடிவில்லாமல் டிராயிங் போர்டைச் சுற்றிக்கொண்டிருக்கும்படி செய்த, அவற்றை வரைந்த ஓவியர் படத்தில் இல்லை. இந்த ஓவியமே அவர் விலகி நின்று தன் கோணத்திலிருந்து வரைந்தது போல் இருக்கிறது.
இந்த சப்ஜெக்ட்டிற்கு மிகக் கிட்ட வரும் இன்னொரு லித்தோகிராஃப்…
Print Gallery, 1956


March 3, 2007 at 6:29 am
I interpret it like this : reptiles are symbol of repetition cumpulsion. book of job and that bottle and bottle and glass setitotti and metal vali are out side drawing board, open book and big book are partly inside partly outside. it is both inside and out side at the same time. reptiles are emerjing from the imaginary endlessly repeating the symbolic chains of their own world, outside of which there is job or duty or ethics whatever it may be… it is work; that glass and bottle is pleasure. so reptiles without work without pleasure (human thing?) repeating themselves endlessly. Dear satan i want your opinion about this interpretation.
March 3, 2007 at 3:47 pm
உங்கள் பார்வை சுவாரஸ்யமாக இருக்கிறது. குறிப்பாக நீங்கள் குறிப்பிடும் other worldliness-உம் செயின் சமாச்சாரமும். ஆனால் உண்மையைச் சொன்னால் எஷரின் படைப்புகளை எவ்வளவு தூரத்திற்கு interpret செய்யலாம் என்று குழப்பமாக இருக்கிறது. ஊர்வனவில் எனக்கு ரொம்ப உறுத்துவது அந்த Book of Job ஒரு மதக் குறியீடா என்ற கேள்விதான்…
March 3, 2007 at 4:53 pm
[...] முந்தைய எஷர் பதிவில் ‘ஊர்வன’ என்ற ஓவியத்தில் வருவது போல இந்தப் படத்திலும் டிராயிங் போர்டுதான் மேடை. [...]
April 8, 2007 at 6:51 pm
//ஊர்வனவில் எனக்கு ரொம்ப உறுத்துவது அந்த Book of Job ஒரு மதக் குறியீடா என்ற கேள்விதான்…//
அது ஒரு மதக் குறியீடு அல்ல என்றுதான் நினைவு – பின்னாளில் எஷரிடமே இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது, கையில் அகப்பட்ட ஒரு புத்தகத்தை வைத்து இந்தச் சித்திரத்தை உருவாக்கியதாகச் சொல்லியுள்ளதாக நினைவு.
April 9, 2007 at 2:21 pm
வருகைக்கு நன்றி! நீங்கள் சொல்வது சுவாரஸ்யமான தகவல். ஒரு கலைஞர் random-ஆக எதையும் செய்ய யாரும் அனுமதிப்பதில்லை!